Published : 06 Jul 2023 04:00 AM
Last Updated : 06 Jul 2023 04:00 AM
வேலூர்: வேலூர் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் பராமரிப்புப் பணியின் போது ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.2 கோடி மதிப்பிலான கன்வேயர் பெல்ட் முழுவதும் எரிந்து சேதமடைந்தது.
வேலூர் மாவட்டம் காட்பாடி வட்டத்துக்கு உட்பட்ட அம்முண்டியில் வேலூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை இயங்கி வருகிறது. இங்கு கரும்பு அரவையுடன் இணை மின் உற்பத்தி நிலையம் செயல்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் கரும்பு அரவை பணியின்போது தினசரி 15 மெகாவாட் வீதம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் தமிழ்நாடு மின்சார வாரியத்துக்கு வழங்கப்படுகிறது.
கூட்டுறவு சர்க்கரை ஆலையில் தற்போது கரும்பு அரவை பணி நிறுத்தப்பட்டுள்ளதால் பராமரிப்புப் பணிகள் நடந்து வருகிறது. இந்த பணியில் சர்க்கரை ஆலையின் முதன்மை பொறியாளர் வெங்கடாஜலபதி தலைமையிலான குழுவினர் ஈடுபட்டுள்ளனர். இவர்கள், இணை மின் உற்பத்தி நிலையத்தின் நீராவி கொதிகலனின் அடுப்புக்கு கரும்பு சக்கைகளை கொண்டு செல்லும் கன்வேயர் பெல்ட்டின் இணைப்புகளுக்கு வெல்டிங் செய்யும் பணியில் நேற்று ஈடுபட்டிருந்தனர்.
மாலை 4 மணியளவில் வெல்டிங் பணியின் போது பறந்த தீப்பொறியால் கன்வேயர் பெல்ட் திடீரென எரிய ஆரம்பித்தது. இதையடுத்து, அங்கிருந்த ஊழியர்கள் தப்பி ஓடினர். சிறிது நேரத்தில் தீ மளமளவென பரவி கன்வேயர் பெல்ட் முழுவதும் கொழுந்துவிட்டு எரிய தொடங்கியது. தகவலின் பேரில் காட்பாடியில் இருந்து தீயணைப்பு நிலைய அலுவலர் பால் பாண்டியன் தலைமையிலான குழுவினர் தீயணைப்பு வீரர்களுடன் விரைந்து சென்று தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.
மேலும், சர்க்கரை ஆலையில் இருந்த தண்ணீரை பயன்படுத்தி சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக போராடி தீயை கட்டுப்படுத்தினர். தீ விபத்தில் 150 மீட்டர் நீளம் கொண்ட சுமார் ரூ.2 கோடி மதிப்பிலான கன்வேயர் பெல்ட் பகுதி முழுவதும் எரிந்து சேதமடைந்தது. வேலூர் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் கடந்த 5 ஆண்டுகளாக இணை மின் உற்பத்தி நிலையம் செயல்பட்டு வருகிறது. ‘புதிய கன்வேயர் பெல்ட் அமைக்க இன்சூரன்ஸ் நிதியை பயன்படுத்த முடியுமா? என்பதை அதிகாரிகள் ஆராய வேண்டியுள்ளது.
தீ விபத்தில் சேதமடைந்த பொருட்கள் குறித்து முழுமையான ஆய்வுக்குப் பிறகே முழு சேத மதிப்பு தெரியவரும். பணியாளர்களின் அஜாக்கிரதை காரணமாகவே இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதற்கான செலவும் கூட்டுறவு சர்க்கரை ஆலைக்குத்தான்’ என்று சர்க்கரை ஆலை சங்க நிர்வாகிதள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. புதிய கன்வேயர் பெல்ட் அமைக்க இன்சூரன்ஸ் நிதியை பயன்படுத்த முடியுமா? என அதிகாரிகள் ஆராய வேண்டியுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT