

விருத்தாசலம்: 6 வயதுக்குட்பட்ட குழந்தைகள், கர்ப்பிணிப் பெண்கள், பாலூட்டும் தாய்மார்கள் மற்றும் வளரிளம் பெண்களுக்கு ஊட்டச்சத்து வழங்குதல் மற்றும் சுகாதார கல்வி ஆகிய சேவைகளை அங்கன்வாடி மையங்கள் வழங்கி வருகின்றன. சுகாதார துறையின் மூலம் தடுப்பூசி செலுத்துதல், சுகாதார பரிசோதனை மற்றும் மருத்துவ பரிந்துரைகளும் இங்கு மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதையெல்லாம் தாண்டி, குழந்தைகளுக் கான தொடக்க நிலை செயல்வழி கற்றலை ‘பால்வாடி’ என அழைக்கப்படும் இந்த அங்கன்வாடி மையங்கள் வழங்கி வருகின்றன.
குறிப்பாக, அங்கன்வாடி மையங்களுக்கு வருகை தரும் 2 முதல் 6 வயது வரையிலான குழந்தைகளுக்கு, ‘ஆடிப்பாடி விளையாடு பாப்பா’ பாடத்திட்டதின்படி விளையாட்டு மூலம், மாதம் ஒரு தலைப்பின் மூலம், உடல், மனம், அறிவு, மொழி, சமூக வளர்ச்சியை உருவாக்கும் கல்வி வழங்கப்பட்டு வருகிறது.
முன் பருவ கல்விக்காக இவ்வாறு வருகை புரியும் குழந்தைகளுக்கு ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் இப்பணிகள் செயல்படுத்தப்படுகின்றன. ஆனால், இத்திட்டங்களை செயல்படுத்தும் அதிகாரிகளில் சிலர் அங்கன்வாடி மையங்களில் போதிய கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தித்தராமல், பெயரளவுக்கு நடத்துகின்றனர். அதன் மூலம் கிராமப்புறங்களில் இயங்கும் தனியார் மழலையர் பள்ளி உரிமையாளர்களுக்கு அவர்கள் ஆதரவாக செயல்படுகின்றனர் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அந்த குற்றச்சாட்டுக்கு ஏற்றார் போல், கடலூர் மாவட்டத்தில் சில இடங்களில் அங்கன்வாடி கட்டிடங்கள் முறையான சுகாதார சூழலின்றி இயங்கி வருகின்றன.
உதாரணமாக, கம்மாபுரம் ஒன்றியத்தில் இயங்கும் இரு அங்கன்வாடி மையங்களும் வாடகைக் கட்டிடத்தில் இயங்கி வருகிறது. இதில் கம்மாபுரம் குடியிருப்பு பகுதியில் இயங்கும் அங்கன்வாடி மையம் கடந்த ஒன்றரை ஆண்டுக்கு முன் பழுதானதால், தற்போது ரூ.500 வாடகைக்கு முழுமை யடையாத ஒரு குடியிருப்புக் கட்டிடத்தில் இயங்கி வருகிறது.
கம்மாபுரம் மேட்டுத் தெருவில் இயங்கும் அங்கன்வாடி மையம், ஒரு குடியிருப்பின் முன்புற வராண்டாவில் ரூ.500 மாத வாடகைக்கு இயங்கி வருகிறது. ‘கடந்த 13 வருடங்களாக இங்கு இதே நிலைதான்’ என்று அங்கு குழந்தைகளை விட்டுச் செல்லும் பெற்றோர் தெரிவிக்கின்றனர். தற்போது இந்த இரு மையங்களிலும் தலா 10 குழந்தைகள் மட்டுமே வந்து செல்கின்றன.
ஏனைய குழந்தைகள் அங்குள்ள மழலையர் பள்ளிகளுக்கு செல்வதை சமூக நோக்கர்கள் குறிப்பிட்டு காட்டுகின்றனர். “எளிய குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் கூட இந்த அங்கன்வாடி மையங்களை புறக்கணிக்கும் அளவுக்கு அதன் தரம் குறைந்து வருகிறது” என்று இக்கிராமங்களில் உள்ளவர்கள் கூறுகின்றனர்.
‘அரசு பல்வேறு எளிய செயல்முறை கல்வித் திட்டங்களுடன், உரிய ஊட்டச்சத்துடன் அங்கன்வாடி மையங்களை நடத்தும் போது, கட்டணம் செலுத்தி மழலையர் பள்ளிக்கு ஏன் செல்கிறீர்கள்?’ என அப்பகுதி பெற்றோர் சிலரிடம் கேட்டபோது, “அரசின் திட்டம் என்னவோ தரமாகவே இருக்கிறது. ஆனால், நீங்கள் குறிப்பிடுவது மாதிரியெல்லாம் அங்கன்வாடி மையங்களில் சொல்லித் தருவதில்லை.
இலவச சீருடையும் வழங்கப்படுவதில்லை ஏதோ பெயரளவுக்கு நடத்துகின்றனர். ஆனால் மழலையர் பள்ளியில் அப்படியில்லை” என்று தெரிவித்தனர். கடலூர் மாவட்டத்தில் மொத்தம் 2023 அங்கன்வாடி மையங்கள் செயல்படும் நிலையில், அவற்றில் 171 மையங்கள் வாடகைக் கட்டிடங்களில் இயங்கி வருகின்றன.
அதற்கான வாடகை நகர்ப்புறமாக இருப்பின் ரூ.4,000 வரையிலும், கிராமப்புறமாக இருப்பின் ரூ.1,000 வரையிலும் நிர்ணயித்துள்ளனர். இந்த குற்றச்சாட்டுக்கு மத்தியிலும் 2023 மையங்கள் மூலம் 95,820 குழந்தைகள், 12,610 கர்ப்பிணி பெண்கள், 8,168 பாலூட்டும் தாய்மார்கள் என மொத்தம் 1 லட்சத்து 16 ஆயிரத்து 598 பயனாளிகள் பயனடைகின்றனர்.
இத்திட்டங்களை செயல்படுத்தும் அதிகாரிகளில் சிலர் அங்கன்வாடி மையங்களில் போதிய கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தித் தராமல், பெயரளவுக்கு நடத்துவதோடு, அதன் மூலம் கிராமப்புறங்களில் இயங்கும் மழலையர் பள்ளிஉரிமையாளர்களுக்கு ஆதரவாக செயல் படுவதுதான் பிரச்சினைக்கு காரணம் என்கின்றனர்.
இக்குற்றச்சாட்டுக் குறித்து மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலர் பழனியிடம் கேட்டபோது, “அதுபோன்று எந்த அலுவலர்களும் செய்ய மாட்டார்கள். குழந்தைகள் குறைந் தால் அலுவலர்களுக்குத் தான் பணி பாதிப்பு ஏற்படும். சில மழலையர் பள்ளி நிர்வாகத்தினர் ஆசை வார்த்தைகளைக் கூறி வீடு வீடாகச் சென்று குழந்தைகளை வணிக நோக்கில் அழைத்துச் செல்கின்றனர்.
அங்கன்வாடி பணியாளர்களும் வீடு வீடாகச் சென்று அரசின் நோக்கம் குறித்து எடுத்துரைத்து குழந்தைகளை மையங்களில் சேர்த்து வருகின்றனர். விரைவில் அனைத்து மையங்களுக்கும் சொந்தக் கட்டிடம் தயாராகி விடும்.சிற்சில குறைகள் இருப்பின் அதுவும் முறையாக பரீசிலிக்கப்பட்டு, உடன் சரிசெய்யப்படும்” என்றார்.