ஆலந்தூர் மெட்ரோ டூவீலர் பார்க்கிங் இடநெருக்கடி: பயணிகள்- ஊழியர்கள் இடையே மோதல் அபாயம்

ஆலந்தூர் மெட்ரோ டூவீலர் பார்க்கிங் இடநெருக்கடி: பயணிகள்- ஊழியர்கள் இடையே மோதல் அபாயம்
Updated on
1 min read

சென்னை: விமானநிலையம்-விம்கோ நகர், பரங்கிமலை- சென்ட்ரல் ஆகிய 2 வழித்தடங்களில் 54 கி.மீ. தொலைவுக்கு மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த வழித்தடங்களில் மொத்தம் 41 மெட்ரோ ரயில் நிலையங்கள் உள்ளன. இந்த நிலையங்களில் வாகனங்களை நிறுத்த இடவசதி செய்யப்பட்டுள்ளது.

மக்களிடம் அதிகரித்து வரும் வரவேற்பு காரணமாக ரயில்களில் கூட்டம் அலைமோதுகிறது. குறிப்பாக, ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலைய டுவீலர் பார்க்கிங் பகுதியில் இடநெருக்கடியால் ஊழியர்களுக்கும் பயணிகளுக்கும் தினமும் வாக்குவாதம் ஏற்பட்டு மோதல் ஏற்படும் சூழல் உருவாகி வருகிறது. அந்த பார்க்கிங்கில் 1,300 டுவீலர்கள் வரை நிறுத்தப்படுகிறது.

இதுகுறித்து, பார்க்கிங்கில் இடம் மறுக்கப்பட்டதால் பாதிக்கப்பட்ட பயணிகள் சிலர் கூறியதாவது: பணிநிமித்தமாகவும் அவசர வேலையாகவும் இங்கு வருகிறோம். உள்ளே விட மறுப்பதால் நேரம் விரயமாகிறது. பார்க்கிங்கில் வண்டிகளை ஒழுங்குபடுத்த ஆட்கள் இருப்பதில்லை. ஒன்றன்பின் ஒன்றாக பக்கவாட்டு பகுதியில் 40 வண்டிகள் நிறுத்தப்பட்டன. அந்த இடத்தில் நோ பார்க்கிங் போர்டுகளை வைத்து பயன்படாமல் செய்துவிட்டார்கள்.

போதிய ஊழியர்களை நியமித்தால், இந்தப் பிரச்சினையை சமாளிக்கலாம். ஊழியர்களின் வாகனங்களுக்கும், மின் வாகனங்களுக்கும் வேறு இடம் அளித்தால், அங்கே பயணிகளுக்கு இடம் கிடைக்கும். போதிய வெளிச்சம் இல்லாத நிலையில், இரவு நேரங்களில் பெண் பயணிகள் கடைசி வரை சென்று வண்டிகளை எடுத்துவர சிரமப்படுகின்றனர். பெண்களுக்கு முன்வரிசைகளில் இடம் ஒதுக்கினால் நல்லது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in