

சென்னை: இந்தியை மட்டுமே தேசிய மொழியாகக் கருதி மரியாதை அளிக்க வேண்டும் என்று பேசிய மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியாவுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
டெல்லியில் நடைபெற்ற மத்திய சுகாதார அமைச்சகத்தின் இந்தி ஆலோசனைக் குழு கூட்டத்தில், மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக்மாண்டவியா, “மாநில மொழிகளை நாம் பேசினாலும், தேசிய மொழி என்ற அடிப்படையில் இந்திக்கு மரியாதை அளிக்க வேண்டும். தேசிய ஒற்றுமைக்கு இந்தி மொழிதான் பாலமாக செயல்படுகிறது” என்று கூறியிருந்தார்.
இதற்கு ராமதாஸ், வைகோ ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக அவர்கள் வெளியிட்ட அறிக்கை:
பாமக நிறுவனர் ராமதாஸ்: மத்திய அமைச்சரின் பேச்சு மத்திய சுகாதார அமைச்சக பணியாளர்கள் மீதான இந்தித் திணிப்பு ஆகும். இதுகடுமையாகக் கண்டிக்கத்தக்கது. அவர் கூறுவதைப் போன்று இந்தி, நாட்டின் தேசிய மொழியும் அல்ல, அது இந்தியாவை ஒருங்கிணைக்கவும் இல்லை. இந்தி மொழிக்கு மட்டும் முதன்மைத்துவம் அளித்தாலும், இந்தி பேசாத மக்கள்மீது திணித்தாலும் அது மக்களிடம் பிளவைத்தான் ஏற்படுத்தும்.
பிறமொழி பேசும் மக்களுக்கு எதிரான இந்திஆலோசனைக் குழுக்கள் உள்ளிட்ட அமைப்புகளை உடனடியாக மத்திய அரசு கலைக்க வேண்டும். 8-வது அட்டவணையில் உள்ள தமிழ் உள்ளிட்ட 22 மொழிகளையும் மத்திய அரசின் அலுவல் மொழியாக அறிவிக்க மத்திய அரசு முன்வர வேண்டும்.
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ: அரசியலமைப்புச் சட்டத்தில் இடம்பெறும் 8-வதுஅட்டவணையில் உள்ள 22 மொழிகளும் தேசியமொழிகள்தான். அவற்றை மக்கள் பேசுவதற்கான மொழிகள் மட்டுமே என்று மத்திய அமைச்சர்சிறுமைப்படுத்துவது கண்டனத்துக்குரியது. இந்தி மொழியை மட்டும் தேசிய மொழி என்று மத்திய பாஜக அரசு அங்கீகரிப்பதும், இந்தி மொழியைத் திணிப்பதும் நாட்டின் பன்முகத்தன்மைக்கு எதிரானதாகும்.
இந்தியாவின் கலாச்சார ஒருமைப்பாடு என்பது பல்வேறு தேசிய இனங்களின் மொழிஉரிமை, இன உரிமை, பண்பாட்டு உரிமையைஏற்று மதித்து பாதுகாப்பதில்தான் அடங்கி யிருக்கிறது என்பதை பாஜக அரசு உணர வேண்டும். அதை விடுத்து ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே பண்பாடு என பாஜக அரசு தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வது ஒருமைப்பாட்டுக்கு உலை வைக்கும் வேலையாகும்.
இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.