கோவை மாநகராட்சியில் அரசு விதிகளை மீறி 11 அதிகாரிகள் பணியில் சேர்க்கப்பட்டதாக குற்றச்சாட்டு

கோவை மாநகராட்சியில் அரசு விதிகளை மீறி 11 அதிகாரிகள் பணியில் சேர்க்கப்பட்டதாக குற்றச்சாட்டு
Updated on
1 min read

கோவை: தமிழக அரசின் விதிகளை மீறி கோவை மாநகராட்சியில் 11 அதிகாரிகள் பணியில் சேர்க்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

கோவையைச் சேர்ந்த சமூக செயல்பாட்டாளர் எஸ்.பி.தியாகராஜன் தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் பெறப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் இந்த தகவல் தெரியவந்துள்ளது.

இது குறித்து எஸ்.பி.தியாகராஜன் கூறியதாவது: மாநகராட்சியில் விதிகளை மீறி ஆட்கள் பணியில் சேர்க்கப்படுவதைத் தடுக்க, கடந்த 2006-ம் ஆண்டு தமிழக அரசின் நகராட்சி நிர்வாகத்துறையினரால் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. ஆனால் கடந்த 2018-ம் ஆண்டு 11 பேர் மாநகராட்சியில் தேர்ச்சி திறனற்ற பணியாளர்களாக பணியில் எடுக்கப்பட்டு, அதில் 10 பேர் தற்போதும் பணிபுரிகின்றனர்.

தற்காலிக பணியாளர்களை நிரந்தரப் பணிக்கு எடுக்கக்கூடாது என்ற அரசாணையை மீறி இவர்கள் பணியில் இணைக்கப்பட்டுள்ளனர். தற்போது பணியாற்றும் 10 நபர்களுக்கு பணி நிரந்தரம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை அப்போதைய நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல்துறை அரசு செயலர் நிராகரித்தார்.

இவர்கள் பணி நியமிக்கப்பட்ட விவகாரம் தொடர்பான கோப்பையும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்ட போது, நகராட்சி நிர்வாக இயக்குநரக அலுவலகத்தில் கோப்பு இல்லை என பதில் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக தமிழக அரசும், லஞ்ச ஒழிப்புத் துறையினரும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார்.

மாநகராட்சி ஆணையர் மு.பிரதாப் கூறும்போது, ‘‘இவ்விவகாரத்தில் அரசின் முடிவுக்காக காத்திருக்கிறோம். அரசு என்ன சொல்கிறதோ அதை நடைமுறைப்படுத்துவோம். தற்போதைய சூழலில் அவர்கள் மாநகராட்சி பணியாளர்கள் தான். அவர்களுக்கு உரிய பணி யிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன,’’ என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in