

செங்குன்றம்: செங்குன்றம் சார் பதிவாளர் அலுவலகத்தில் வருமான வரித் துறை அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். திருவள்ளூர் மாவட்டம், செங்குன்றத்தில் உள்ள சார் பதிவாளர் அலுவலகத்தில் நாள்தோறும் நூற்றுக்கும் மேற்பட்ட பத்திரப் பதிவுகள் நடைபெற்று வருகின்றன.
இந்த அலுவலகத்தில் சமீப காலமாக அதிக அளவில் பத்திர பதிவு நடைபெற்று வருவதாகவும், இதனால் இங்கு முறைகேடுகள் நடைபெற வாய்ப்புள்ளதாகவும் வருமானவரித் துறையினருக்கு பொதுமக்கள் தரப்பிலிருந்து புகார் சென்றதாக கூறப்படுகிறது.
இதையடுத்து, நேற்று மதியம்செங்குன்றம் சார் பதிவாளர் அலுவலகத்துக்கு 3 கார்களில் 10-க்கும் மேற்பட்ட வருமானவரித் துறை அதிகாரிகள் துப்பாக்கி ஏந்திய போலீஸாரின் பாதுகாப்புடன் அதிரடியாக நுழைந்து திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
இந்த அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்ட நிலங்களின் விவரங்கள் கோப்புகளில் முறையாக உள்ளதா? பணப் பரிவர்த்தனைகள் சரியான முறையில் நடைபெற்றுள்ளதா? என்பது தொடர்பாக ஆவணங்களை ஆய்வு செய்தனர்.
மேலும், சார் பதிவாளர் அலுவலர் மற்றும் பணியாளர்களிடம் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர்.துப்பாக்கி ஏந்திய போலீஸார் பாதுகாப்புடன் நடைபெற்ற இச்சோதனை நேற்று இரவு 7 மணிக்குமேலும் நீடித்தது. இச்சோதனையில் முக்கிய ஆவணங்கள் சிக்கியதாகவும் அந்த ஆவணங்களின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வாய்ப்புள்ளதாகவும் அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.