

ஆண்டிபட்டி: வைகை அணைக்கு நீர்வரத்து முற்றிலும் இல்லாத நிலையில் நீர்மட்டம் நேற்று 50 அடிக்கு கீழ் குறையத் தொடங்கியது. இதனால் முதல்போகத்துக்கான தண்ணீர் திறப்பில் தொடர்ந்து தாமதம் ஏற்பட்டு வருகிறது.
வைகை அணையில் இருந்து பெரியாறு பிரதானக் கால்வாய் பாசனத் திட்டத்தின் கீழ் திண்டுக்கல், மதுரை மாவட்டத்தில் இருபோக சாகுபடி நடைபெற்று வருகிறது. இதில் திண்டுக்கல் மாவட்டத்தில் ஆயிரத்து 797 ஏக்கர் நிலங்களும், மதுரை மாவட்டத்தில் 43 ஆயிரத்து 244 ஏக்கர் நிலங்கள் என மொத்தம் 45 ஆயிரத்து 41 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன.
இதற்காக ஒவ்வொரு ஜூன் முதல் வாரத்தில் தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம். கடந்த 3 ஆண்டுகளில் அணையில் போதுமான அளவு நீர் இருப்பு இருந்ததால் சாகுபடிக்கு சரியான நேரத்தில் தண்ணீர் திறக்கப்பட்டது. ஆனால், கடந்த சில மாதங்களாக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்யாததால் அணைக்கான நீர்வரத்து வெகுவாக குறைந்தது.
குறிப்பாக, கடந்த 10 நாட்களுக்கும் மேலாக நீர்வரத்து பூஜ்ய நிலையிலேயே இருந்து வருகிறது. இதனால் கடந்த மாதத்தின் தொடக்கத்தில் 52 அடியாக இருந்த நீர்மட்டம் தொடர்ந்து குறையத் தொடங்கியது. இந்நிலையில் கூட்டுக் குடிநீர் திட்டத்துக்கு விநாடிக்கு 69 கன அடி நீர் தொடந்து வெளியேற்றப்பட்டு வருவதால் நீர்மட்டம் நேற்று 49.95 அடியாகக் குறைந்தது.
இதனால் அணையில் உள்ள நீர்த்தேக்கப் பகுதிகள் குறைந்து பாறைகள் அதிகளவில் வெளியே தெரியத் தொடங்கின. நீர்மட்டம் குறைந்து கொண்டே செல்வதால் இந்த ஆண்டு முதல்போக சாகுபடிக்கு தண்ணீர் திறப்பதில் தொடர்ந்து தாமதம் ஏற்பட்டு வருகிறது. தென்மேற்கு பருவமழையால் அணையின் நீர்வரத்து உயரும் என்று எதிர்பார்த்திருந்த நிலையில் இப்பருவமழையும் வலுக்காத நிலை உள்ளது. இதனால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.
பெரியாறு அணை நீர்மட்டத்தைப் பொருத்தளவில் தற்போது 114.95 அடியாக உள்ளது. நீர்வரத்து விநாடிக்கு 602 கன அடியாகவும், நீர் வெளியேற்றம் 408 கன அடியாகவும் உள்ளது. நீர்வளத்துறை அதிகாரிகள் கூறுகையில், தற்போதுதான் தென்மேற்குப் பருவமழை தீவிரமடையத் தொடங்கியுள்ளது. இதனால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து, நீர்மட்டமும் உயர வாய்ப்புள்ளது என்றனர்.