மின்னணு ஏற்றுமதியில் தமிழகம் முதலிடம் - திராவிட மாடல் அரசின் செயல்திறனுக்கு எடுத்துக்காட்டு என முதல்வர் பெருமிதம்

மின்னணு ஏற்றுமதியில் தமிழகம் முதலிடம் - திராவிட மாடல் அரசின் செயல்திறனுக்கு எடுத்துக்காட்டு என முதல்வர் பெருமிதம்
Updated on
1 min read

சென்னை: கடந்த 2017 முதல் 2023-ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில், நாடு முழுவதும் மின்னணு ஏற்றுமதி தொடர்பான கணிப்பில், தமிழகம் 2022-23-ம்
நிதியாண்டில் நாட்டிலேயே முதலிடம் பிடித்துள்ளது. குறிப்பாக, உத்தர பிரதேசம், கர்நாடகா மாநிலங்களைப் பின்னுக்குத் தள்ளி, தமிழகம் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளது.

மின்னணு ஏற்றுமதியைப் பொறுத்தவரை, ரூ.44 ஆயிரத்து 44 கோடி மதிப்பில் தமிழகம் ஏற்றுமதி செய்துள்ளது. அடுத்தபடியாக உத்தர பிரதேசம் ரூ.40,216 கோடி, கர்நாடகா ரூ.37,082 கோடி, மகாராஷ்டிரா ரூ.22,004 கோடி, குஜராத் ரூ.19,139 கோடி, டெல்லி ரூ.9,102 கோடிக்கு ஏற்றுமதி செய்துள்ளன. 2020-21-ம் நிதியாண்டில் மூன்றாம் இடத்தில் இருந்த தமிழகம் தற்போது முதலிடத்துக்கு வந்துள்ளது. மேலும், கடந்த 2 ஆண்டுகளில் தமிழத்தின் ஏற்றுமதி 223 சதவீதம் அதிகரித்துள்ளது.

உலகத் தரமான உட்கட்டமைப்பு, வலுவான விநியோகச் சங்கிலி, உலகளாவிய இணைப்பு, சிறந்த தொழில் கொள்கை ஆகியவற்றால் தமிழகம் முதலிடத்துக்கு உயர்ந்துள்ளதாக தொழில் துறை மற்றும் தமிழ்நாடு வழிகாட்டி நிறுவனம் ஆகியவை தெரிவித்துள்ளன.

இந்நிலையில், இந்த சாதனை தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்ட சமூகவலைதளப் பதிவில், ‘‘திராவிட மாடல் அரசின் செயல்திறனுக்கான சிறிய எடுத்துக்காட்டுதான், மின்னணுப் பொருட்கள் ஏற்றுமதியில் இந்தியாவிலேயே தமிழகம் முதலிடம் என்ற இந்த சாதனை.

முதலீட்டாளர்களின் முதல் முகவரியாக தமிழகத்தை உயர்த்தி, தெற்காசியாவின் முதலீட்டு மையமாக தமிழகத்தை மேம்படுத்த உழைக்கிறோம். தொடர்ந்து இதற்கான வாய்ப்புகளை ஆராய்ந்து, அவற்றில் சிறந்து விளங்கிடுவோம்’’ என்று தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in