

சென்னை: கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் மின்தடை ஏற்படாமல் தடுக்க, முன்னெச்சரிக்கையுடன் செயல்படுமாறு பொறியாளர்களுக்கு மின்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு உத்தரவிட்டுள்ளார்.
சென்னை அண்ணாசாலையில் உள்ள தமிழ்நாடு மின்வாரிய தலைமை அலுவலகத்தில், கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள கோவை, நீலகிரி, திருப்பூர், தேனி மற்றும் திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் மின்துறை சார்பாக எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நேற்று நடைபெற்றது.
அமைச்சர் தங்கம் தென்னரசு தலைமை வகித்து, அனைத்து தலைமை மற்றும் மேற்பார்வைப் பொறியாளர்களுடன் காணொலி மூலமாக உரையாடினார்.
அப்போது, அமைச்சர் தங்கம் தென்னரசு பேசியதாவது: கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள இடங்களில் அனைத்து தலைமை மற்றும் மேற்பார்வைப் பொறியாளர்கள் உரிய முன்னெச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும். தேவையான தளவாட பொருட்கள் மற்றும்உபகரணங்களை முன்கூட்டியே தயார் நிலையில் வைத்துக் கொள்ள வேண்டும்.
மின் இணைப்பு துண்டிக்கப்பட்டால் முன்னுரிமை அடிப்படையில் மருத்துவமனைகள், குடிநீர் விநியோக நிலையங்களுக்கு மின்சாரம் வழங்க வேண்டும்.
அனைத்து மேற்பார்வையாளர்களும் இதற்கென தனிக்குழு அமைத்து, சேதாரங்கள் குறித்து ஆய்வு செய்ய வேண்டும். 3 லட்சம் மின்கம்பங்கள், 22 ஆயிரம் கி.மீ.மின்கம்பிகள், 18,395 மின்மாற்றிகள் மற்றும் உபகரணங்கள் கையிருப்பில் உள்ளன. இவ்வாறு அமைச்சர் கூறினார்.