குழந்தை கை அகற்றப்பட்ட விவகாரம் | விசாரணை குழு அறிக்கை இன்று மாலை சமர்ப்பிப்பு: சிகிச்சையில் அலட்சியம் இருந்தால் நடவடிக்கை என அமைச்சர் உறுதி

குழந்தை கை அகற்றப்பட்ட விவகாரம் | விசாரணை குழு அறிக்கை இன்று மாலை சமர்ப்பிப்பு: சிகிச்சையில் அலட்சியம் இருந்தால் நடவடிக்கை என அமைச்சர் உறுதி
Updated on
1 min read

சென்னை: ஒன்றரை வயது குழந்தையின் கைஅகற்றப்பட்ட விவகாரத்தில் விசாரணைக் குழு அறிக்கை இன்று மாலைசமர்ப்பிக்கப்பட உள்ளது. சிகிச்சையில் அலட்சியம், கவனக்குறைவு இருப்பது தெரியவந்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

இதற்கிடையில், மருத்துவர், செவிலியர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி போலீஸில் பெற்றோர் புகார் அளித்துள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்தவர் தஸ்தகீர்-அஜிஸா தம்பதியின் ஒன்றரை வயது மகன் முகமது மகிர். தலையில் நீர் கோர்த்தல் பிரச்சினை காரணமாக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் குழந்தையை சேர்த்தனர்.

அங்கு, குழந்தையின் வலது கையில் ‘ட்ரிப்ஸ்’ போடப்பட்டுள்ளது. இந்நிலையில், அந்தக் கை செயலிழந்து, அழுகியது. பின்னர், எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில், குழந்தையின் வலது கை அகற்றப்பட்டது.

உயர்தர சிகிச்சை: இந்நிலையில், அங்கு நேற்று சென்ற அமைச்சர் மா.சுப்பிரமணியன், குழந்தைக்கு உயர்தரசிகிச்சை அளிக்குமாறு மருத்துவர்களுக்கு அறிவுறுத்தினார். மருத்துவக் கல்வி இயக்குநர் சாந்திமலர், ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை டீன் தேரணிராஜன், எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனை இயக்குநர் ரெமா சந்திரமோகன், எழும்பூர் தொகுதி எம்எல்ஏ இ.பரந்தாமன் உடனிருந்தனர்.

குழந்தைக்கு தவறான சிகிச்சை அளித்த மருத்துவர், செவிலியர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை வளாகத்தில் உள்ள காவல் நிலையத்தில் குழந்தையின் பெற்றோர் புகார் அளித்துள்ளனர்.

இது தொடர்பாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: இந்தக் குழந்தை 32 வாரத்தில்,குறை பிரசவத்தில் பிறந்துள்ளது. குறைவான எடை, இதயத்தில் ஓட்டைஉள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளுடன் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக குழந்தை போராடி வந்துள்ளது.

ஏற்கெனவே, தேவக்கோட்டை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த இந்தக் குழந்தைக்கு ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், குழந்தைக்கு ரத்த உறைதல் பிரச்சினை ஏற்பட்டு, வலது கையில் ரத்த ஓட்டம் தடைப்பட்டுள்ளது. குழந்தையின் உயிரைக் காப்பாற்றுவதற்காக, வலது கையை அகற்றியுள்ளனர்.

குழந்தைக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை தொடர்பாக பெற்றோர் குற்றம் சாட்டுவதால், விசாரணை நடத்த 3 மருத்துவர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்தக் குழுவினர் நாளை (இன்று) மாலை 5 மணிக்கு விசாரணை அறிக்கையை சமர்ப்பிக்க உள்ளனர்.

குறை சொல்ல வேண்டாம்: குழந்தையின் சிகிச்சையில் அலட்சியம், கவனக்குறைவு இருந்தது உறுதியானால், சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.குழந்தையின் பெற்றோர் விருப்பப்பட்டால், தனியார் மருத்துவமனை மருத்துவர்களை அழைத்து வந்துகூட சிகிச்சை குறித்து ஆய்வு செய்யலாம். அரசு மருத்துவமனைகளின் மருத்துவ சேவையை குறை சொல்ல வேண்டாம். இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in