Published : 04 Jul 2023 06:24 AM
Last Updated : 04 Jul 2023 06:24 AM
சென்னை: மாற்றுத் திறனாளிகள் குறித்து பேசியதற்காக விசிக தலைவர் திருமாவளவன் வருத்தம் தெரிவித்துள்ளார். மதுரை மாவட்டம் மேலவளவில் மேலவளவு போராளிகள் நினைவு தின நிகழ்ச்சி கடந்த 30-ம் தேதி நடந்தது. இதில் கலந்துகொண்ட விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், மாற்றுத் திறனாளிகள் குறித்து பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. தங்கள் மனதை புண்படுத்தும் வகையில் அவர் பேசியதாக பல்வேறு மாற்றுத் திறனாளிகள் சங்கங்களும் கண்டனம் தெரிவித்தன.
இந்நிலையில், தனது பேச்சுக்கு வருத்தம் தெரிவித்து திருமாவளவன் நேற்று வெளியிட்ட ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: மதுரை மாவட்டம் மேலவளவில் கடந்த 30-ம் தேதி நடந்த மேலவளவு போராளிகள் நினைவு தின நிகழ்ச்சியில் நான் உரையாற்றினேன்.
என்னை பற்றி தனிப்பட்ட முறையில் அவதூறு பரப்பும் ஒருசிலரை கண்டிக்கும் வகையில், ஆதங்கப்பட்டு எனது உரையின் போக்கிலேயே தன்னிலை விளக்கம் அளித்தேன்.
அப்போது, என்னையும் அறியாமல் தவறுதலாக மாற்றுத் திறனாளிகள் மனம் நோகும் வகையில் ஓரிரு சொற்கள் நா தவறி வந்துவிட்டன. அதற்காக, அப்போதே வருத்தம் தெரிவித்தேன். இனி அவ்வாறு நிகழாத வண்ணம் பார்த்துக் கொள்கிறேன். மாற்றுத் திறனாளிகளின் நலன்கள், உரிமைகளுக்காக தொடர்ந்து குரல்கொடுத்து வரும் இயக்கம் விசிக.
அதேபோல, நான் ஒருபோதும் மாற்றுத் திறனாளிகளை காயப்படுத்தும் உள்நோக்கமோ, அவர்களை பற்றி தரக்குறைவான மதிப்பீடோ கொண்டவன் இல்லை. மாற்றுத் திறனாளிகளுக்கான இயக்கத்தை நடத்தும் முன்னணி பொறுப்பாளர்கள் பலரும் இதை அறிவார்கள். என் தவறுதலான பேச்சுக்கு வருந்துகிறேன். மாற்றுத் திறனாளிகள் பொறுத்தருள வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT