

சென்னை: சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் ஒன்றரை வயது குழந்தையின் கை அகற்றப்பட்ட விவகாரத்தில், பணியிலிருந்த செவிலியர் மற்றும் மருத்துவர் மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கக் கோரி காவல் நிலையத்தில் குழந்தையின் பெற்றோர் புகார் அளித்துள்ளனர்.
சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் ஒன்றரை வயது குழந்தையின் கை அழுகிய விவகாரம் தொடர்பாக குழந்தையின் பெற்றோர், மருத்துவமனை வளாகத்தில் உள்ள புறகாவல் நிலையத்தில் புகார் அளித்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய குழந்தையின் தாய் அஜிஸா கூறியது: "இந்த அவல நிலையால்தான், நான் இன்று எனது கணவர் மூலமாக காவல் நிலையத்தில் இந்தப் புகாரை அளிக்க வந்தேன். காவல் நிலையத்தில் புகார் அளித்துவிட்டேன். எங்கள் புகாரின்படி விசாரணை நடத்தி, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இதன்பிறகு, என் பிள்ளைக்கு நடந்ததுபோல, வேறு யாருக்கும் நடக்கக்கூடாது. எனவே, எங்கள் புகாரின் மீது சரியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
எனது குழந்தையை சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தபோது, அந்த வார்டில் இருந்த செவிலியர்கள், மருத்துவர்கள் மீது புகார் அளித்துள்ளேன். ஒரு செவிலியர்தான் இந்தப் பிரச்சினைக்கு முக்கிய காரணம். அதேபோல் அன்றைக்கு பணியில் இருந்த மருத்துவரும் இதற்கு காரணம். எனவே, அவர்கள் இருவரிடமும் தகுந்த விசாரணை நடத்தி, என் பையனுக்கு நல்ல தீர்வை ஏற்படுத்தி தர வேண்டும்.
எங்கள் பின்னணியில் யாரும் கிடையாது. என்னோட குழந்தைக்கு நடந்தது போல, வேறு யாருக்கும் நடந்துவிடக் கூடாது என்பதற்காகத்தான் நான் இவ்வளவு தூரம் போராடுகிறேன். இது தமிழக அரசின் காதுகளை சென்றடைய வேண்டும். அதைத் தாண்டியுள்ள இடங்களிலும் இந்த விஷயம் பரவ வேண்டும். என் பிள்ளைக்கு நல்ல ஒரு முடிவு தெரிந்தால் போதும்.
எங்களை மருத்துவத் துறை அதிகாரிகள் யாரும் மிரட்டவில்லை. எங்களுக்கு யாரும் எதுவும் சொல்லியும் கொடுக்கவில்லை. ஆனால், இன்று மருத்துவத் துறை சார்பாக பேசியவர்கள் அனைவருமே எதிர்மறையாகத்தான் பேசினார்கள். குழந்தை பிறந்தவுடன் அவனுக்கு எந்தப் பிரச்சினையுமே இல்லை. அவன் பிறந்து 3 மாதங்களுக்குப் பிறகுதான், அவன் தலையில் நீர் இருக்கிறது என்று கூறினார்களே தவிர, வேறு எந்த பிரச்சினையும் அவனுக்கு இருப்பதாக சொல்லவே இல்லை.
மூளையில் நீர் கசிவு இருப்பதாக யாரும் சொல்லவில்லை. குறைமாதத்தில் பிறக்கும் எல்லா குழந்தைகளுக்குமே இதயத்தில் கோளாறு இருக்கும். ஆனால், அது ஒரு வருடத்தில் சரியாகும் என்று சொன்னார்கள்" என்று குழந்தையின் தாய் கூறினார்.
முன்னதாக, “அறுவை சிகிச்சை செய்து கையை எடுக்காவிட்டால், குழந்தையின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்ற காரணத்தால், 3 பேர் அடங்கிய உயர் மட்டக்குழு அமைத்து அறுவை சிகிச்சை செய்யப்பட்டது” என்று சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையின் டீன் தேரணி ராஜன் விளக்கம் அளித்துள்ளார். அதன் முழு விவரம் > “உயிருக்கு ஆபத்து என்பதால் குழந்தையின் கை அகற்றம்” - ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை டீன் விளக்கம்
இதனிடையே, "தமிழக மருத்துவத் துறையின் பெருமை, இந்த திமுக ஆட்சியில் சீர்குலைந்துள்ளது. அதிமுகவின் 31 ஆண்டு கால ஆட்சியில் தலைநிமிர்ந்து நின்ற தமிழக மருத்துவத் துறை, கடந்த இரண்டு ஆண்டுகளாக பொம்மை முதல்வரின் பரிபாலனத்தில் தலைகுனிந்து நிற்கிறது" என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். | முழுமையாக வாசிக்க > குழந்தையின் கை அகற்றம் | “தமிழக மருத்துவத் துறையின் பெருமை சீர்குலைவு” - காரணங்களை அடுக்கி இபிஎஸ் சாடல்