Published : 03 Jul 2023 06:30 PM
Last Updated : 03 Jul 2023 06:30 PM
விருத்தாசலம்: தமிழ்நாடு காவல் துறையில் 1973-ம் ஆண்டு பெண்கள் சேர்த்துக்கொள்ளப்பட்டனர். அனைத்து காவல் உட்கோட்டங்களிலும் ஒரு மகளிர் காவல் நிலையம் என்ற வகையில் 1992-ல் இந்தியாவுக்கே முன்னோடியாக தமிழ்நாட்டில் முதல் மகளிர் காவல் நிலையம் சென்னை ஆயிரம் விளக்கில் தொடங்கப்பட்டது.
ஒரு பெண் காவல் ஆய்வாளர், 3 பெண் உதவி ஆய்வாளர்கள், 6 பெண் தலைமைக் காவலர்கள், 24 பெண் காவலர்கள் என்ற எண்ணிக்கையுடன் தொடங்கப்பட்டது. பின்னர் ஒவ்வொரு உட்கோட்டங்களுக்கும் மகளிர் காவல் நிலையங்கள் உருவாக்கப்பட்டன. தற்போது மாநிலத்தில் 202 மகளிர் காவல் நிலையங்கள் செயல்படுகின்றன.
இந்திய அளவில் சண்டிகருக்கு அடுத்தபடியாக தமிழ்நாட்டில் தான் பெண் காவலர்களின் எண்ணிக்கை அதிகம். தமிழ்நாட்டின் மொத்த காவலர்களில் 19.4 சதவீதத்தினர் பெண்கள். மகளிர் பிரச்சினைகளை ஆய்வு செய்து அதற்கு தீர்வு காணும் நோக்கில் உருவாக்கப்பட்ட மகளிர் காவல் நிலையங்களில் புகார் அளிக்க வரும் மகளிர், “பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்குள் ஆயுள் காலமே முடிந்துவிடும் போலிக்கிறது” என கவலை தெரிவிக்கின்றனர்.
கடலூர் அடுத்த திருப்பாதிரிப்புலியூரைச் சேர்ந்த பெண் ஒருவர், கடலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகார் மீது முதற்கட்ட விசாரணை முடிந்து 3 மாதங்களாகியும் இதுவரை தனக்கு தீர்வு கிடைக்கவில்லை என குறிப்பிடுகிறார். இதேபோல் பண்ருட்டி, விருத்தாசலம், சேத்தியாத்தோப்பு, திட்டக்குடி, சிதம்பரம் உள்ளிட்ட அனைத்து மகளிர் காவல் நிலையங்களிலும் இதே நிலைதான் நீடிக்கிறது. கம்மாபுரத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் விருத்தாசலம் காவல் நிலையத்தில் புகார் அளித்து ஒரு மாதத்துக்கு மேலாகிறது.
விசாரிக்கவே இல்லையே என அழாத குறையாக கேட்டார். அதற்கு பதிலளித்த பெண் காவலர், “அதிகாரி வேறொரு விசாரணைக்கு வெளியே சென்றுள்ளார். போதிய விசாரணை அதிகாரிகளும் இல்லை. புகாருக்கு உள்ளான நபரை அழைத்து வர போதிய காவலர்களும் இல்லை. எங்கள் குறையை யாரிடம் கூறுவது” என பதிலுக்கு அவரிடம் பேசினார்.
இது தொடர்பாக பெண்ணாடத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் கூறுகையில், “என் கணவரும், மாமியாரும் கொடுக்கும் டார்ச்சர் தாங்க முடியாமல் தனியே வாழ முடிவு செய்துவிட்டேன். எனது பொருளை கேட்டாலும் கொடுக்க மறுக்கின்றனர். அதனால் புகார் அளித்தேன். கடந்த 6 மாதமாக அலைகிறேன். இதுவரை பொருள் கிடைத்தபாடில்லை.
ஒவ்வொரு முறையும் இவர்கள் கூறும் தினத்தில் விசாரணைக்கு வருகிறோம். ஆனால் விசாரணை அதிகாரி வெளியே சென்று விடுகிறார். இந்த பொருளை வாங்குவதற்குள் எனது ஆயுளே முடிந்துவிடும் போலிருக்கிறது. இதற்கு மகளிர் காவல் நிலைய போலீஸார் தான் முடிவு கட்ட வேண்டும்” என்றார்.
இது தொடர்பாக சில பெண் காவல் ஆய்வாளர்களிடம் பேசியபோது, “காவல் நிலையங்களுக்கு வரும் பெண் புகார்தாரர்கள் நிலை பரிதாபத்துக் குரியது தான். அவர்களின் கதையை கேட்கும் போது கண்களே கலங்கும். அவர்களுக்கு தீர்வு காண வேண்டும் என துடிப்பு எங்களிடம் உள்ளது. ஆனால் அதற்குரிய மனிதத் திறன் எங்களிடம் இல்லை.
எங்கள் காவல் நிலையத்துக்கு அனுமதிக்கப்பட்ட காவலர்கள் எண்ணிக்கை 35. ஆனால் நடைமுறையில் இருப்பது ஒரு ஆய்வாளர், 2 உதவி ஆய்வாளர், 3 தலைமைக் காவலர்கள், 4 காவலர்கள் என 10 பேர் தான் உள்ளோம். இதில் ஒருவர் உயர்நீதிமன்ற வழக்கு விசாரணைக்கும், இருவர் மாவட்ட நீதிமன்ற வழக்கு விசாரணைக்கும் ஒதுக்கப்படுவர்.
மேலும் ஒருவர் கணினி இயக்குபவர், மீதி 6 பேரைக் கொண்டு ஒரு சப்-டிவிஷனையே பார்க்க வேண்டும். இதில் அவ்வப்போது பந்தோபஸ்து செல்ல வேண்டும். இரவு ரோந்துப் பணிக்கும் செல்ல வேண்டும். அப்புறம் எப்படி புகாருக்குள் ளான நபரை அழைத்து வர செல்வது? எங்களுக்கு கொடுத்துள்ள வாகனமோ, தள்ளுவண்டியை விட மோசம். இந்த லட்சணத்தில் எப்படிங்க நாங்க குறித்த காலத்திற்குள் விசாரணை முடிக்க முடியும்? ” என ஆதங்கப்படுகின்றனர்.
இது தொடர்பாக மாவட்ட காவல் அதிகாரிகளிடம் கேட்டபோது, “காவல் துறையில் ஒவ்வொரு பிரிவுக்கும் தனித்தனி ஆள் சேர்ப்பு கிடையாது. மொத்தமாக காவல் துறைக்கு ஆள் எடுத்து காவல் நிலையங்களுக்கு அனுப்புவோம். பின்னர் அதே காவல் நிலையத்தில் இருந்து, போக்கு வரத்துக்கு தனி, சிறப்புப் பிரிவுக்கு தனி, தனிப்படைக்கு தனி, சைபர் கிரைமுக்கு தனி, டிஎஸ்பி அலுவலகத்துக்கு பணியாள் என பிரித்து அனுப்பவோம்.
கொடுப்பது போல கொடுத்து, திரும்பவும் அங்கிருந்து எடுத்து விடுவோம். இதுதான் காலங்காலமாக நிகழும் நடைமுறை. ஒவ்வொரு பிரிவுக்கும் தனித்தனியாக ஆள் சேர்ப்பு நடைபெற்றால் மட்டுமே காவலர்கள் பற்றாக்குறையை போக்க முடியும். அரசே பார்த்து செய்தால் தான் நல்லது நடக்கும்” என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT