

திருவண்ணாமலை: வந்தவாசி அருகே சென்னாவரம் கிராமத்தில் சமூக விரோதிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பாழடைந்த கட்டிடத்தை மீட்டெடுத்து மாற்று திட்டத்துக்கு பயன்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த சென்னாவரம் கிராமத் தில் பாழடைந்த கட்டிடம் உள்ளது. இந்த கட்டிடத்தில் கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பு தொழிற்சாலை செயல்பட்டதாக கிராம மக்கள் கூறுகின்றனர். தொழில் நலிவுற்றதால், காகித தொழிற்சாலை மூடப்பட்டு, இயந்திரங்களும் அகற்றப் பட்டுள்ளன. 25 ஆண்டுகளுக்கு மேலாக, கட்டிடம் பயனற்று கிடக்கிறது.
இந்நிலையில், இந்த பாழடைந்த கட்டிடம் சமூக விரோத கும்பலின் கட்டுப்பாட்டில் உள்ளது. மது குடிப்பது, கஞ்சா புகைப்பது, சூதாட்டம் போன்ற சமூக விரோத செயல்கள் தங்கு தடையின்றி அரங்கேறி வருகின்றன. மேலும் விரும்பத்தகாத நிகழ்வுகளும் நடைபெறுகின்றன. சமூக விரோத கும்பலின் நடமாட்டம் இரவு, பகல் பாராமல் உள்ளது.
இதனால், இக்கட்டி டத்தின் வழியாக செல்வதற்கு கிராம மக்கள் அச்சப்படுகின்றனர். சமூக விரோத கும்பலின் பிடியில் இருந்து கட்டிடத்தை மீட்டு, மாற்று திட்ட பயன் பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறும்போது, “சென்னாவரம் கிராமத்தில் காகித தொழிற்சாலை செயல்பட்டு வந்ததாகவும், பல ஆண்டுகளுக்கு முன்பு மூடப் பட்டதாகவும் கூறப்படுகிறது. தற்போது, இக்கட்டிடம் பாழடைந்து கிடக்கிறது. இந்த இடத்தை சமூக விரோதிகள், தங்களது சுய நலனுக்காக பயன்படுத்தி வருகின்றனர். மது மற்றும் சாராயம் குடிப்பது, கஞ்சா புகைப்பது உள்ளிட்ட விரும்பத்தகாத செயல்கள் நடைபெறு கின்றன. இவர்களது பிடியில் இருந்து கட்டிடத்தை மீட்டெடுக்க வேண்டும்.
தொழிற்சாலை செயல்பட்டு வந்த சுமார் 2 ஏக்கர் இடம், பாய் உற்பத்தி நல சங்கத்துக்கு ஒதுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த இடத்தில் கோரை பாய் தொழில் பூங்கா தொடங்க லாம். குடியிருப்பு கட்டிடம் கட்டிக் கொடுக்கலாம். இதற்கு, தமிழக அரசு முன்வர வேண்டும். வந்தவாசியில் கடந்த 2016-ல் பிரச் சாரம் செய்த முதல்வர் ஸ்டாலின், பாய் உற்பத்தியாளர்களின் கோரிக்கையை ஏற்று, கோரை பாய் தொழில் பூங்கா அமைத்து கொடுக்கப்படும் என உறுதி அளித்திருந்தார்.
அவர், தனது வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும். கோரை பாய் உற்பத்தி தொழிலை நம்பி, வந்தவாசி சுற்றுப் பகுதியில் நேரிடையாகவும், மறைமுகமாகவும் சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வாழ்ந்து வருகின்றனர். கோரை பாய் தொழில் பூங்கா அமைக்கப்பட்டால், இக்குடும்பங்களின் வாழ்வாதாரம் மிளிரும்” என்றனர்.