Published : 03 Jul 2023 06:54 AM
Last Updated : 03 Jul 2023 06:54 AM

கல் குவாரிகள் வேலைநிறுத்தம் காரணமாக தமிழகம் முழுவதும் கட்டுமானப் பணிகள் கடுமையாக பாதிப்பு

கோப்புப் படம்

சென்னை: கல் குவாரிகள் வேலைநிறுத்தத்தால் தமிழகம் முழுவதும் கட்டுமானப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. எனவே, இந்தப் பிரச்சினையில் முதல்வர் தலையிட்டு, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கட்டுமானத் துறையினர் வலியுறுத்தியுள்ளனர்.

தமிழ்நாடு முழுவதும் 2 ஆயிரம் கல்குவாரிகள், 3,500 கிரஷர் யூனிட்டுகள் செயல்படுகின்றன. ஒவ்வொரு கிரஷர் யூனிட்டிலும் 300-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

இந்நிலையில், கல் குவாரி தொழிலைப் பாதிக்கும் வகையில், மத்திய அரசு அண்மையில் சிலபுதிய விதிமுறைகளை அறிவித்தது. அவற்றை கர்நாடகா, ஆந்திராமாநிலங்கள் அமல்படுத்தாத நிலையில், தமிழக அரசு அதிகாரிகள் அமல்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இதையடுத்து, `கனிமங்களுக்கான விதிமுறைகளை, கல் மற்றும்ஜல்லி உடைக்கும் தொழில்கள்போன்ற சிறிய கனிம தொழில்களுக்கு அமல்படுத்துவதை நிறுத்த வேண்டும். தமிழகம் முழுவதும் அரசு நிலங்களில் பல கோடி ரூபாய் மதிப்பிலான கனிம வளங்கள் திருட்டில் பயனடைந்த அரசு அதிகாரிகள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கிரஷர், கல் குவாரி உரிமையாளர்களை அச்சுறுத்தும் அதிகாரிகள் மீதும், சமூக ஆர்வலர்கள் என்ற போர்வையில் மிரட்டி பணம்பறிப்போர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழகத்தில் அனைத்து கிரஷர், கல் குவாரிகள் கடந்த மாதம் 26-ம்தேதி முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன.

இதனால், ரெடிமிக்ஸ், ஹாட்மிக்ஸ் உள்ளிட்ட இதர கட்டுமானத் தொழிலில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களுக்கு, கல், ஜல்லி விநியோகம் செய்வதில் தடை ஏற்பட்டு,கட்டுமானப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து எம்-சாண்ட் மணல் லாரி உரிமையாளர்கள் சங்கத் தலைவர் எஸ்.யுவராஜ் கூறியதாவது:

கட்டுமான நிறுவனங்கள் 3 நாட்களுக்குத் தேவையான ஜல்லிகள், எம்-சாண்ட் உள்ளிட்ட மூலப்பொருட்களை மட்டும் இருப்பு வைத்துள்ளன. இதனால் கட்டுமானப் பணிகள் பாதிக்கக்கூடிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, மெட்ரோ ரயில் பணிகள் பாதிப்படைந்துள்ளன.

தமிழகத்தில் தினமும் 25 ஆயிரம்லோடு கனிமங்கள் தேவைப்படுகின்றன. இந்த வேலைநிறுத்தம் காரணமாக தமிழகத்தில் 40 ஆயிரம்லாரிகளுக்கு தொழில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கிருஷ்ணகிரியில் இருந்து கர்நாடக மாநிலத்துக்குகனிம வளங்களை ஏற்றிக்கொண்டுதினமும் 850 லாரிகள் செல்கின்றன. குவாரி வேலைநிறுத்தம் காரணமாக கர்நாடகாவிலும் கட்டுமானப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.

வேலை இல்லாததால் வடமாநிலத் தொழிலாளர்கள், தங்கள் சொந்த ஊர்களுக்குத் திரும்பிச்செல்லத் தொடங்கி உள்ளனர்.எனவே, குவாரி உரிமையாளர்களை, முதல்வர் ஸ்டாலின் உடனடியாக அழைத்துப் பேசி, பிரச்சினைக்குத் தீர்வுகாண வேண்டும்.

எம்-சாண்ட் தயாரிப்பு தொடர்பாக தமிழக அரசு கடந்த 6 வருடங்களாக எவ்வித சட்ட, திட்டங்களையும் உருவாக்கவில்லை. இது தொடர்பாக நாங்கள் விடுத்த கோரிக்கையை ஏற்ற முதல்வர், எம்-சாண்ட் தயாரிப்பு தொடர்பாக சட்டதிட்டங்கள் உருவாக்கப்படும் என்று 2 மாதங்களுக்கு முன்பு தெரிவித்தார். ஆனால், இதுவரை எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.

மேலும், கனிம வளங்களைக் கொண்டு செல்வதற்கு தமிழக அரசு இதுவரை ‘இ-வே பில்’களை அறிமுகப்படுத்தவில்லை. இதனால் அரசுக்கு ரூ.30 ஆயிரம் கோடி வரை வருவாய் இழப்பு ஏற்படுகிறது. இது தொடர்பாக தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல, தமிழகத்தில் இருந்து கேரளா, கர்நாடகா மாநிலங்களுக்கு கனிம வளங்களை எடுத்துச் செல்வதை அரசு தடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

இந்திய ரியல் எஸ்டேட் டெவலப்பர்கள் சங்கங்களின் கூட்டமைப்பின் (கிரெடாய்) சென்னை அமைப்பு தலைவர் எஸ்.சிவகுருநாதன் கூறும்போது, ‘‘கரோனாபாதிப்புக்குப் பிறகு கட்டுமான நிறுவனங்களுக்குத் தேவையான மூலப்பொருட்கள் கடனில் வழங்கப்படுவதில்லை. இதனால் கட்டுமான நிறுவனங்கள் பணம் கொடுத்து மூலப் பொருட்களை வாங்குகின்றன. எனவே, 5 நாட்களுக்குத் தேவையான பொருட்களை மட்டுமே கையிருப்பில் வைத்துள்ளன. இந்நிலையில், குவாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தம் தொடரும்பட்சத்தில் கட்டுமானத் தொழில் பாதிக்கக் கூடிய சூழ்நிலை ஏற்படும்’’ என்றார்.

கிரெடாய் அமைப்பின் தமிழ்நாடுதலைவர் ஆர்.இளங்கோவன் கூறும்போது, ‘‘தமிழகம் முழுவதும் கல் குவாரிகள் மேற்கொண்டுள்ள வேலைநிறுத்தப் போராட்டத்தால், கட்டுமான மூலப் பொருட்களான எம்-சாண்ட், பி-சாண்ட் உள்ளிட்டவை கிடைக்கவில்லை. இதனால் கட்டுமானப் பணிகளை நிறுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், தொழிலாளர்கள் வேலைமற்றும் வருவாயின்றித் தவிக்கும்சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

குறித்த காலத்தில் வீடுகளைகட்டி முடித்து, உரிமையாளர்களிடம் ஒப்படைக்க முடியாத நிலையால் ஒப்பந்ததாரர்கள், ப்ரமோட்டர்களுக்கு கடும் நிதிச் சுமை ஏற்பட்டுள்ளது. எனவே, இந்தப் பிரச்சினையில் முதல்வர் உடனடியாக தலையிட்டு, உரிய தீர்வுகாண நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x