

சென்னை: மேகேதாட்டு அணை விவகாரத்தில் பாஜகதான் குற்றவாளி என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது:
கர்நாடக மாநிலத்தில் மோடிக்குஎதிராக நடைபெறும் கூட்டத்தில்முதல்வர் ஸ்டாலின் பங்கேற்ககூடாது என்றும், அவர் கலந்துகொண்டால், தமிழகத்துக்குள் நுழையமுடியாது என்றும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
அவர், தமிழகத்தை உத்தர பிரதேச மாநிலம்போல கருதியுள்ளார். கர்நாடக அரசு மேகேதாட்டு அணை கட்டினால், அதற்கு காங்கிரஸும், திமுகவும்தான் காரணம் என்று அவர் குற்றம்சாட்டுகிறார். இதற்கு அடித்தளமிட்டதே, அப்போது கர்நாடகத்தில் ஆட்சியில் இருந்த பாஜகதான்.
கர்நாடக மாநில முதல்வராக பொம்மை இருந்தபோது, மேகேதாட்டு அணை கட்டுவதற்கான வரைவுத் திட்டத்தை டெல்லிக்கு கொண்டுசென்று, மத்திய நீர்வளத் துறை அமைச்சகத்தில் அனுமதி பெற்றார்.
மத்திய நீர்வள அமைச்சகம் அனுமதி கொடுக்கும்போது, தமிழ்நாடு, புதுச்சேரி மாநில அரசுகளிடம் ஆலோசனை கேட்டிருக்க வேண்டும். ஆனால், மத்தியில் இருந்தபாஜக அரசு, தங்களது கட்சி ஆளும் மாநிலத்துக்கு சாதகமான அனுமதியைக் கொடுத்துவிட்டது. அதை அடிப்படையாகக் கொண்டுதான், மேகேதாட்டு அணை அமைக்கும் பணிகளை கர்நாடக பாஜக அரசு தொடங்கியது.
தமிழக முதல்வரை மாநிலத்தில் அனுமதிக்க மாட்டேன் என்று கூறும் வலிமையோ, அரசியல் திறனோ, பண்பாடோ அண்ணாமலையிடம் இல்லை.
காவிரிப் பிரச்சினையைப் பொறுத்தவரை தமிழக அரசும், தமிழ்நாடு காங்கிரஸும் தெளிவான நிலையில் உள்ளன. வறட்சி மற்றும் மழைக் காலங்களில் எவ்வளவு தண்ணீர் தர வேண்டும், தண்ணீரை வேறு இடங்களில் தேக்கி வைப்பது எந்த அளவுக்கு குற்றம் என்பது தொடர்பாக உச்ச நீதிமன்ற வழிகாட்டுதல்கள் தெளிவாக இருக்கின்றன.
உச்ச நீதிமன்ற வழிகாட்டுதல்களை மீறி, தமிழகத்துக்கு தண்ணீர் தர முடியாது என்று கர்நாடகம் கூறமுடியாது. அப்படிக் கூறினாலும், அதை தமிழக அரசு ஏற்றுக் கொள்ளாது. தமிழக அரசு உரிமைகளுக்காகப் போராடக் கூடியது. முதல்வர் ஸ்டாலின், மாநில அரசின் உரிமைகளுக்காக எந்த தியாகத்தையும் செய்யத் தயாராக இருக்கிறார். கூட்டணிக் கட்சிகளும், மாநில உரிமைக்காக நேர்மையாகப் போராடுவோம்.
கர்நாடக அமைச்சர் கூறுவதாலேயே, அது சட்டமாகாது. தமிழக காங்கிரஸ் கட்சிக்கு, கர்நாடகத்தினர் தலைவர் கிடையாது. கட்சியின் தலைமை டெல்லியில் உள்ளது. எனவே, எங்களையும், தமிழக அரசையும் யாரும் கட்டுப்படுத்த முடியாது. இதல்லாம் தெரிந்தும், பாஜகவினர் நாடகமாடிக் கொண்டிருக்கிறார்கள்.
மேகேதாட்டு விவகாரத்தில் குற்றவாளி பாஜகதான். இதைமறைத்து, மற்றவர்கள் மீதுபழிபோட பாஜகவினர் முயல்கின்றனர். இந்த முயற்சியைத் தடுத்து நிறுத்துவோம்.
இவ்வாறு கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.