

உதகை: கோடை சீசன் நிறைவடைந்ததால், உதகையிலுள்ள பூங்காக்களில் சினிமா படப்பிடிப்பு நடத்தமீண்டும் அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் கோடை சீசன் காலமான ஏப்ரல், மே மாதங்களில் வெளி மாநிலங்கள் மற்றும் பிற மாவட்டங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் ஆயிரக்கணக்கானோர் வருவர். அவர்களை மகிழ்விக்கும் வகையில், உதகை தாவரவியல் பூங்காவில் மலர்க் கண்காட்சி, ரோஜா பூங்காவில் ரோஜா கண்காட்சி, சிம்ஸ் பூங்காவில் பழக் கண்காட்சி உட்பட கோடை விழா நடத்தப்படுவது வழக்கம். இதனால், தாவரவியல் பூங்கா உட்பட 7 பூங்காக்களில் சினிமா படப்பிடிப்புக்கு ஏப்.1 முதல் தடை விதிக்கப்பட்டிருந்தது.
பூங்காவில் உள்ள நடைபாதையோரம், மலர் பாத்திகளில் மலர் செடிகள் சேதம் ஏற்படுவதை தவிர்க்கவும், சுற்றுலா பயணிகளுக்கு இடையூறு இல்லாமல் இருக்கவும் ஏப்ரல், மே, ஜூன் ஆகிய 3 மாதங்கள் சினிமா படப்பிடிப்புக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், கோடை சீசன் நிறைவடைந்ததால் ஜூலை 1-ம் தேதி முதல் தோட்டக்கலைதுறைக்கு சொந்தமான 7 பூங்காக்களிலும் சினிமா படப்பிடிப்புக்கு அனுமதி அளிக்கப்படுவதாக தோட்டக்கலைத் துறை அறிவித்துள்ளது.