ரயில் வரும் நேரத்தில் கேட்டை அடைக்க விடாமல் தடுப்பு: அபாயத்தை உணராமல் சென்ற திமுக எம்.பி., எம்எல்ஏ வாகனங்கள்

கொடைரோடு- அம்மாபட்டி ரயில்வே கேட்டை கடந்து சென்ற திமுக எம்எல்ஏ, எம்.பி. மற்றும் நிர்வாகிகளின் வாகனங்கள்.
கொடைரோடு- அம்மாபட்டி ரயில்வே கேட்டை கடந்து சென்ற திமுக எம்எல்ஏ, எம்.பி. மற்றும் நிர்வாகிகளின் வாகனங்கள்.
Updated on
1 min read

மதுரை: திண்டுக்கல் அருகே எக்ஸ்பிரஸ் ரயில் வரும்போது கேட்டை அடைக்க விடாமல் கேட் கீப்பரிடம் கெடுபிடி செய்த திமுகவினரால் பெரும் விபத்து அபாயம் ஏற்பட்டது.

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே அம்மையநாயக்கனூருக்கு மாவட்ட திமுக செயலரும் பழநி தொகுதி எம்ஏல்ஏவுமான ஐபி.செந்தில்குமார், திண்டுக்கல் மக்களவை உறுப்பினர் வேலுச்சாமி உள்ளிட்ட நிர்வாகிகள் வாகனங்களில் சென்றனர். கொடைரோடு - அம்மாபட்டி ரயில்வே கேட்டை அவர்கள் 6.20 மணியளவில் கடக்க முயன்றனர்.

அப்போது, நெல்லை-மும்பை அதிவிரைவு தாதர் எக்ஸ்பிரஸ் அப்பகுதியைக் கடப்பதற்காக சிக்னல் அளிக்கப்பட்டு எச்சரிக்கை ஒலித்தது. கேட் கீப்பரும் உடனடியாக கேட்டை அடைக்கும் பணியில் ஈடுபட்டார். அந்நேரத்தில் டூ வீலர், வாகனங்களில் அணிவகுத்து வந்த திமுகவினர், கேட்டை அடைக்க விடாமல் கேட்கீப்பரை கெடுபிடி செய்து தடுத்ததாக கூறப்படுகிறது.

இதனால், வேறுவழியின்றி கேட்டை மூடாமல் கேட்கீப்பர் பாதியிலேயே நிறுத்தினார். இதைத் தொடர்ந்து திமுகவினரின் 20-க்கும் மேற்பட்ட வாகனங்கள் அணிவகுத்துச் சென்றன. அதைத் தொடர்ந்து பிற வாகனங்களும் சென்றதால் ரயில் வந்துவிடுமோ என்ற பதற்றம் ஏற்பட்டது.

அப்போது திடீரென தண்டவாளபகுதியில் பள்ளி வாகனம் ஒன்று சிக்கியதால் கேட்கீப்பரும், மக்களும், அங்கிருந்த போலீஸாரும் பெரும் பதற்றத்துக்குள்ளாகினர். அப்பகுதியை ரயில் கடக்க சில நிமிடமே இருந்த நிலையில், கேட் கீப்பர் செய்வதறியாமல் பரிதவித்தார். உடனே அங்கிருந்த அம்மையநாக்கனூர் காவல் எஸ்ஐ கருப்பையா, துரிதமாகச் செயல்பட்டு தண்டவாளப் பகுதியில் இருந்து வாகனங்களை வேகமாக அப்புறப்படுத்தினார்.

அதன்பின் அவசரமாக கேட் மூடப்பட்ட சில நிமிடத்தில் அவ்வழியாக எக்ஸ்பிரஸ் ரயில் வேகமாகக் கடந்து சென்றது. இதில் சிறிது தாமதம் ஏற்பட்டிருந்தாலும் பெரும் அசம்பாவிதம் ஏற்பட்டிருக்கும் என அங்கிருந்தவர்கள் தெரிவித்தனர்.

ரயில் வருவதாக சிக்னல் கிடைத்து, அலாரம் ஒலித்த நிலையில், கேட் கீப்பரிடம் வலுக்கட்டாயமாக ரயில்வே கேட்டை அடைக்க விடாமல் கெடுபிடி செய்து தண்டவாளத்தைக் கடந்த திமுகவினரால் பெரிய விபத்து ஏற்படும் அபாயம் இருந்ததாக அப்பகுதியினர் தெரிவித்தனர். இதுகுறித்து ரயில்வே அதிகாரி ஒருவர் கூறுகையில், இந்த சம்பவம் பற்றி விசாரணை நடத்தி வருகிறோம். தவறு நடந்திருந்தால் கேட் கீப்பர் மூலம் போலீஸ், ரயில்வே உயர் அதிகாரிகளிடம் புகார் தரப்படும்’ என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in