

நாகப்பட்டினம்: நாகை மாவட்டம் வேதாரண்யம், ஆறுகாட்டுதுறை, கோடியக்கரை, மணியன் தீவு, புஷ்பவனம் உள்ளிட்ட பகுதிகளில் ‘சாகர் கவாச்’ என்னும் பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது. இதில், 40-க்கும் மேற்பட்ட கடலோர காவல் படையினர், ஊர்க்காவல் படையினர் கடலில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், இந்திய கடலோர காவல் படைக்கு சொந்தமான ரோவர் கிராப்ட் ரோந்து கப்பல் கோடியக்கரைக்கு நேற்று முன்தினம் வந்தது.
நீரிலும், நிலத்திலும் செல்லக்கூடிய இந்த ரோந்து கப்பல் மூலம் கண்காணிப்பு பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடி, உணவுப் பொருள் விலைவாசி உயர்வு ஆகிய காரணங்களினால் அங்குள்ள மக்கள் கடல் மார்க்கமாக படகில் தமிழகத்துக்கு வரக்கூடும் என்பதால், கோடியக்கரையில் இருந்து தனுஷ்கோடி வரை ரோவர் கிராப்ட் ரோந்து கப்பல் மூலம் கண்காணிப்பில் கடலோர காவல் படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும், தமிழகத்திலிருந்து இலங்கைக்கு உணவுப் பொருட்கள், உடைகள், தங்கம், எரிபொருட்கள் கடத்தப்படுகின்றனவா? என்றும் கண்காணிக்கப்படுகிறது.