Published : 03 Jul 2023 04:05 AM
Last Updated : 03 Jul 2023 04:05 AM
கிருஷ்ணகிரி: மத்தூர் அருகே மயானத்துக்குப் பாதை வசதி இல்லாததால் ஆற்றில் இறங்கி இறந்தவரின், உடலை கிராம மக்கள் சுமந்து சென்றனர்.
மத்தூர் அருகே எம்ஜிஆர் சேக்கிழம்பட்டி, கிராமத்தில் சுமார் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் உள்ளவர்கள் இறந்தால் அருகில் உள்ள மயானத்துக்கு இறந்தவர்களின் உடலை எடுத்துச் செல்ல பாதை வசதியில்லை. இதனால், அப்பகுதியில் உள்ள ஆற்று நீரைக் கடந்து மயானத்துக்கு செல்லும் நிலை இருந்து வருகிறது.
ஆற்றில் தண்ணீர் வரும்போது, கிராம மக்கள் இறந்தவரின் உடலை எடுத்துச் செல்ல சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர். இந்நிலையில், நேற்று அப்பகுதியைச் சேர்ந்த பாக்கியம் (60) என்பவர் உடல் நலக் குறைவால் உயிரிழந்தார். அவரின் உடலை அடக்கம் செய்ய அவரது உறவினர் கள் மற்றும் கிராம மக்கள் சிரமத்துடன் ஆற்று நீரைக் கடந்து, உடலை சுமந்து சென்றனர்.
இது தொடர்பாக கிராம மக்கள் கூறியதாவது: எங்கள் கிராமத்துக்கு மயான வசதி இருந்தும் சாலை வசதி இல்லை. இறந்தவர்களின் உடலை ஆற்று நீரில் இறங்கி எடுத்து செல்ல வேண்டிய நிலையுள்ளது. மயானத்துக்குப் பாதை வசதி செய்து தரக்கோரி பல முறை மனு அளித்தும் நடவடிக்கை இல்லை. எனவே, எங்களின் சிரமங்களைப் போக்க மயானத்துக்குப் பாதை வசதி செய்து தர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT