Published : 03 Jul 2023 06:26 AM
Last Updated : 03 Jul 2023 06:26 AM

“விஞ்ஞானம் மீது நம்பிக்கை இல்லை... பழமைவாதத்தையே ஆளுநர் நம்புகிறார்” - செல்வப்பெருந்தகை விமர்சனம்

சென்னை: விஞ்ஞானத்தின் மீது ஆளுநருக்கு நம்பிக்கை இல்லை. பழமைவாதம் மீதே அவர் நம்பிக்கை கொண்டுள்ளார் என்று தமிழக சட்டப்பேரவை காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை விமர்சனம் செய்துள்ளார்.

தமிழ்நாடு காங்கிரஸ் தொழிலாளர் சங்கத்தின் நிறுவன தலைவர்மறைந்த நஞ்சப்பன் 73-வது பிறந்தநாளை முன்னிட்டு, சங்கத்தின்96-வது மாநில செயற்குழு கூட்டம், அமைப்புசாரா தொழிலாளர் வாழ்வுரிமை கருத்தரங்கம் சென்னை சத்தியமூர்த்தி பவனில் நேற்று நடந்தது. இதற்கு சங்கத்தின் மாநில தலைவர் புவனேஸ்வரி நஞ்சப்பன் தலைமை தாங்கினார்.

சங்கத்தின் இணையதளத்தை சட்டப்பேரவை காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தொடங்கிவைத்தார். பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

கடந்த காங்கிரஸ் ஆட்சியின்போது இருந்த 44 தொழிற்சங்கங்கள் தற்போது வெறும் 4 சங்கங்களாக மாறியிருக்கின்றன. மீண்டும் காங்கிரஸ் ஆட்சி அமையும்போது பழையபடி சங்கங்கள் செழுமைப்படுத்தப்படும். மேகேதாட்டு அணை தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. நீதிமன்ற அனுமதி இல்லாமலும், தமிழக அரசுடன் கலந்துபேசாமலும் கர்நாடக அரசு அணை கட்ட முடியாது. அதை மீறி கர்நாடக அரசு செயல்பட்டால், தமிழக காங்கிரஸ் எதிர்த்து குரல் கொடுக்கும்.

கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை ராகுல் காந்தி தேசிய நல்லிணக்க பயணம் மேற்கொண்டார். அதைத் தொடர்ந்து,தமிழகத்திலும் காங்கிரஸ் பாதயாத்திரைக்கு திட்டமிடப்பட்டிருந்தது. இதற்கிடையே தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நடைபயணம் மேற்கொள்ள உள்ளார். அவர் தனது நடைபயணத்தில் பல கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டும். பாத யாத்திரையை அவர் வெற்றிகரமாக முடிப்பாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

சனாதனத்தில் தீண்டாமை இல்லை என்கிறார் ஆளுநர். ஆனால், அதில் இருந்துதான் தீண்டாமையே நுழைந்துள்ளது என்பது அவருக்கு தெரியவில்லை. விஞ்ஞானத்தின் மீது ஆளுநருக்கு நம்பிக்கை இல்லை. பழமைவாதம் மீதே நம்பிக்கை கொண்டுள்ளார். இதற்கு எல்லாம் வரும் தேர்தலில் இளைஞர்கள் பதிலடி கொடுப்பார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிகழ்வில், தமிழ்நாடு காங்கிரஸ் தொழிலாளர் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர்கோதண்டம், துணைத் தலைவர் பொன் கிருஷ்ணமூர்த்தி, ஐஎன்டியுசி மூத்த பொதுச்செயலாளர் டி.வி.சேவியர், எச்எம்எஸ் நிர்வாகி டி.எஸ்.ராஜாமணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x