Published : 03 Jul 2023 06:57 AM
Last Updated : 03 Jul 2023 06:57 AM
சென்னை: சென்னை சென்ட்ரல், எழும்பூர், தாம்பரம் உட்பட 23 ரயில் நிலையங்களில் மின்னணு கழிப்பறை வசதி ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. முதல்கட்டமாக, சென்னை சென்ட்ரல் புறநகர்(எம்எம்சி) ரயில் நிலையத்தில் நவீன மின்னணு கழிப்பறை அமைக்கும் பணி வேகமாக நடைபெறுகிறது.
சென்னை ரயில்வே கோட்டத்தில் 150-க்கும் மேற்பட்ட ரயில் நிலையங்கள் உள்ளன. இந்த ரயில் நிலையங்கள் வழியாக 300-க்கும் மேற்பட்ட மின்சார ரயில்கள், 200-க்கும்மேற்பட்ட விரைவு, அதிவிரைவு ரயில்கள் என 550-க்கும் மேற்பட்ட ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த ரயில்களில் நாள்தோறும் 12 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பயணிக்கின்றனர். ரயில்நிலையங்களுக்கு வந்து செல்லும் பயணிகளுக்கான அடிப்படை வசதிகளை மேம்படுத்த ரயில்வே நிர்வாகம் பல்வேறு நடவடிக்கை எடுத்துவருகிறது. அதன்படி, ரயில் நிலையங்களில் நகரும் படிக்கட்டு, மின்தூக்கி வசதி, மேற்கூரை அமைத்தல், குடிநீர் வசதி, நடைமேம்பாலம் என பல்வேறு வசதிகள் செய்யப்படுகின்றன.
மேலும், சென்னை சென்ட்ரல், எழும்பூர், தாம்பரம் உள்பட 23ரயில் நிலையங்களில் மின்னணு கழிப்பறை வசதி ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
முதல்கட்டமாக, சென்ட்ரலில் உள்ள புறநகர் ரயில் நிலையத்தில் மின்னணு கழிப்பறை அமைக்கப்படுகிறது. இப்பணி தற்போது வேகமாக நடைபெறுகிறது.
இதுகுறித்து சென்னை கோட்டரயில்வே அதிகாரிகள் கூறியதாவது: முதல்கட்டமாக, சென்ட்ரல் ரயில் நிலையம், புறநகர்ரயில் நிலையத்தில் மின்னணு கழிப்பறை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. முன்பு, ரயில் நிலையங்களில் கட்டண கழிப்பறை பராமரிப்பு ஒப்பந்தம் 2ஆண்டுகளுக்கு மட்டும் வழங்கப்பட்டது. இந்த ஒப்பந்தம் முடிந்தபிறகு, புதிய ஒப்பந்தம் வழங்குவது, ஒப்பந்தம் புதுப்பித்தல் ஆகியவை தாமதம் ஏற்படும். இதனால், கழிப்பறைகள் பராமரிப்பு இன்றி காணப்படும். பயணிகள் சிரமத்தை சந்திப்பர். இதற்கு தீர்வு காணும் வகையில், 10 ஆண்டுக்கான ஒப்பந்தம் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. முதல்கட்டமாக, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் புதுப்பித்தல், இயக்குதல், பராமரித்தல் மற்றும் மாற்றுதல் (ஆர்ஒஎம்டி) மாதிரியின் கீழ் 10 ஆண்டுகளுக்கான முதல் மின்னணு கழிப்பறைக்கான ஒப்பந்தம் சமீபத்தில் வழங்கப்பட்டது.
இது பொதுக் கழிப்பறைகளை நவீனமயமாக்குவதற்கான ஒரு படியாகும். மேலும், இது ரூ. 32.33லட்சம் (ஆண்டு உரிமக் கட்டணம்) திட்டத்துக்கான ஒப்பந்தம். இந்த கழிப்பறையை பயன்படுத்திய பிறகு, தானாகவே சுத்தம்செய்யும். குறைந்தபட்ச பராமரித்தாலே போதும்.
டிஜிட்டல் (QR குறியீடு) அல்லது நாணயம் செலுத்திய பிறகு,ஒவ்வோர் முறையும் பயணி, கழிப்பறையை பயன்படுத்தும்போது, பயன்பாட்டுக்குப் பிறகு தானாகவே சுத்தம் செய்யும் விதமாக வடிவமைக்கப்படும். முதலில், சென்னை சென்ட்ரல் பகுதியில் உள்ள 6 கழிப்பறைகள் மின்னணு கழிப்பறைகளாக மாற்றப்படும். அம்ரித் பாரத் நிலையத்தின் திட்டத்தின்கீழ் உருவாக்கப்படும் 15 நிலையங்கள் உட்பட 23 நிலையங்களுக்கு இந்த வசதியை விரிவுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இது ரயில் நிலையத்தின் சுகாதாரத்தை மேம்படுத்தும்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT