போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸாருக்கு எதிராக பூந்தமல்லி அருகே போராட்டம் நடத்திய கார் ஓட்டுநர்கள் கைது

பூந்தமல்லி அருகே ஆவடி போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீ ஸாருக்கு எதிராக பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்ட கார் ஓட்டுநர்கள்.
பூந்தமல்லி அருகே ஆவடி போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீ ஸாருக்கு எதிராக பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்ட கார் ஓட்டுநர்கள்.
Updated on
1 min read

பூந்தமல்லி: பூந்தமல்லி அருகே போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸாருக்கு எதிராக பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்ட 60-க்கும் மேற்பட்ட கார் ஓட்டுநர்கள் கைது செய்யப்பட்டனர்.

காஞ்சிபுரம் மாவட்டம், மாங்காடு, லீலாவதி நகரைச் சேர்ந்தவர் மோகன்ராஜ் (38). கார் ஓட்டுநர். இவர் ஓட்டிச் சென்ற கார், கடந்த சில தினங்களுக்கு முன்பு, ஆவடி அருகே திருமுல்லைவாயில் பகுதியில் சாலையோரம் நின்ற கிரேன்மீது மோதியது. இதில், காரும், கிரேனும் சேதமடைந்தன. இதுகுறித்து, வழக்குப் பதிவு செய்த ஆவடி போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸார், மோகன்ராஜை கைது செய்து, பிணையில் விடுவித்தனர்.

மேலும், மோகன்ராஜ் அளித்தபுகாரின் பேரில், போக்குவரத்துக்கு இடையூறாக சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த கிரேன் ஆப்ரேட்டர் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்றும் தன் மீது போட்டப்பட்ட வழக்கு தொடர்பாக முதல் தகவல் அறிக்கை நகலை வழங்க வேண்டும் என்றும் போலீஸாரிடம் கேட்டதாக கூறப்படுகிறது,

அதுமட்டுமல்லாமல், மோகன்ராஜ், முதல் தகவல் அறிக்கை நகலை வழங்க போலீஸார் தன்னிடம் லஞ்சம் கேட்டதாக குற்றம்சாட்டினார். இந்நிலையில், நேற்றுமதியம் இந்த விவகாரத்தில் உரிமை குரல் ஓட்டுநர் சங்கம் சார்பில், கார் ஓட்டுநர்கள் 60-க்கும் மேற்பட்டோர், பூந்தமல்லி அருகே சென்னீர்குப்பத்தில் உள்ள ஆவடி போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு காவல் நிலையம் முன்பு திரண்டு, போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸாருக்கு எதிராக கைகளில் தட்டுகளை ஏந்தி பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், அவர்கள், அப்பகுதியில் உள்ள கடைகளில் பிச்சை எடுத்து கொண்டு ஆவடி போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு காவல் நிலையத்தில் பிச்சையாக எடுத்த பணத்தை அளிக்க முயன்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து, தகவலறிந்த பூந்தமல்லி போலீஸார், சம்பவ இடம் விரைந்து, போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் போராட்டத்தில் ஈடுபட்டதாக கார் ஓட்டுநர்களை கைது செய்து மாலையில் விடுவித்தனர்.

இதுகுறித்து காவல்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில்,’ மோகன்ராஜிடம் முதல் தகவல் அறிக்கை அளிக்க போலீஸார் லஞ்சம் கேட்கவில்லை. அவர் கூறுவது உண்மைக்கு புறம்பானது’ என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in