Published : 03 Jul 2023 07:03 AM
Last Updated : 03 Jul 2023 07:03 AM

தமிழகத்தில் 60,587 தூய்மை பணியாளர்களுக்கு ஓராண்டுக்குள் முழு உடல் பரிசோதனை திட்டம் தொடக்கம்

தூய்மைப் பணியாளர்களுக்கான சிறப்பு முழு உடல் பரிசோதனை திட்டத்தை சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சென்னை எம்.ஜி.ஆர். நகரில் நேற்று தொடங்கி வைத்தார். உடன், மேயர் பிரியா, துறை செயலர் ககன்தீப் சிங் பேடி, மாநகராட்சி ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர். படம்: எஸ்.சத்தியசீலன்

சென்னை: தமிழகத்தில் உள்ள அனைத்து மாநகராட்சி, நகராட்சிகளில் பணிபுரியும் 60,587 தூய்மைப் பணியாளர்களுக்கு ஓராண்டுக்குள் முழு உடல் பரிசோதனை திட்டத்தை சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.

தமிழகத்தில் உள்ள அனைத்து மாநகராட்சி மற்றும் நகராட்சிகளில் பணிபுரியும் 60,587 நகர்ப்புற தூய்மைப் பணியாளர்களுக்கான சிறப்பு முழு உடல் பரிசோதனை திட்டத்தை செயல்படுத்தும் வகையில் சென்னை கோடம்பாக்கம் மண்டலம் அண்ணா பிரதான சாலையில் உள்ள எம்ஜிஆர் நகர்அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் திட்டத்தை சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று தொடங்கி வைத்தார்.

சென்னை மாநகராட்சி ஆணையர் ஆர்.பிரியா, துணை மேயர் மு.மகேஷ்குமார், ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணன், சுகாதாரத் துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி, பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்புத் துறை இயக்குநர் டி.எஸ்.செல்வவிநாயகம் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்: அப்போது, அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:

நடப்பாண்டு மானிய கோரிக்கைக்குள் சுகாதாரத் துறையில் 110 அறிவிப்புகள் அறிவிக்கப்பட்டன. அனைத்து அறிவிப்புகளும் அடுத்த ஆண்டு மானிய கோரிகைக்குள் நிறைவேற்றப்படும். 104-வது அறிவிப்பான தமிழகத்தில் உள்ள அனைத்து மாநகராட்சி மற்றும் நகராட்சிகளில் பணிபுரியும் 60,587நகர்ப்புற தூய்மைப் பணியாளர்களுக்கான சிறப்பு முழு உடல் பரிசோதனை திட்டம் தொடங்கப்பட்டுஉள்ளது.

ஓராண்டுக்குள் அனைவருக்கும் அரசு மருத்துவமனைகளில் முழு உடல் பரிசோதனை செய்யப்படும். உயர் மருத்துவ சிகிச்சைகள் தேவைப்படுவோருக்கு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளுக்கு பரிந்துரைக்கப்பட்டு உயர் சிகிச்சை அளிக்கப்படவுள்ளது.

உரிய சிகிச்சை அளிக்கப்படும்: அவர்களின் குடும்பத்தினர் அனைவருக்கும், அவர்களின் உடல்நலம் காக்க, ரத்த அழுத்தம், நீரிழிவு நோய் போன்ற தொற்றாநோய்கள், தோல் பிரச்சினைகள், ரத்த சோகை, எழும்பியல் நோய்கள், கண் நோய்கள், பற்சிதைவு, குடல் மற்றும் கருப்பை இறக்கம் மற்றும் மனச்சோர்வு போன்ற நோய்களுக்கு உரிய பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு சிகிச்சைகள் அளிக்கப்பட உள்ளது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x