Published : 03 Jul 2023 07:24 AM
Last Updated : 03 Jul 2023 07:24 AM
சென்னை: குரூப் 5 ஏ பணித்தேர்வு முடிவுகள் விரைவில் வெளியாகும் என்று டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.
தமிழக அரசின் பல்வேறு துறைகளில் உள்ள காலிப்பணியிடங்கள் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) நடத்தும் போட்டித் தேர்வுகள் மூலம் நிரப்பப்பட்டு வருகின்றன.
அதன்படி அரசுத் துறைகளில் அமைச்சுப் பணிகளில் இருப்பவர்கள் தலைமைச் செயலகப் பணிகளுக்கு செல்வதற்காக குரூப் 5ஏ தேர்வு நடத்தப்படுகிறது. அதன்படி தலைமைச் செயலகத்தில் உதவிப்பிரிவு அலுவலர், உதவியாளர் உட்பட பதவிகளில் உள்ள 161 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் 5 தேர்வு அறிவிப்பாணையை டிஎன்பிஎஸ்சி கடந்த ஆகஸ்ட் 23-ம் தேதி வெளியிட்டது.
தொடர்ந்து விண்ணப்பங்களை இணையவழியில் பதிவேற்ற செப்டம்பர் 21-ம் தேதி வரை காலஅவகாசம் வழங்கப்பட்டது. இதையடுத்து குரூப் 5ஏ தேர்வெழுத 383 பெண்கள் உட்பட மொத்தம் 1,114 பேர் விண்ணப்பித்தனர். அவர்களுக்கான எழுத்துத் தேர்வு சென்னையில் டிசம்பர் 18-ம் தேதி நடத்தப்பட்டது.
தேர்வர்கள் அதிருப்தி: காலையில் பொது தமிழ் தாள் தேர்வும், மதியம் பொது ஆங்கிலத் தாள் தேர்வும் நடைபெற்றது. இந்நிலையில் தேர்வு முடிந்து சுமார் 7 மாதங்களாகிவிட்ட சூழலில், முடிவுகள் இன்னும் வெளியாகாமல் இருப்பது தேர்வர்கள் மத்தியில்அதிருப்தியை ஏற்படுத்திஉள்ளது.
இதுதொடர்பாக கும்பகோணத்தை சேர்ந்த பெயர் கூற விரும்பாத வாசகர் ஒருவர் இந்து தமிழ் உங்கள் குரலில் தொலைபேசி வாயிலாக புகார் அளித்தார். அதில், ‘குரூப் 5ஏ தேர்வு முடிவுகள் ஏப்ரல் மாதம் வெளியிடப்படும். சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு மே மாதம் நடத்தி பணி ஒதுக்கீடு செய்யப்படும் என்று டிஎன்பிஎஸ்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால், ஜூலை மாதம் வந்துவிட்ட சூழலில் இன்னும் முடிவுகள் அறிவிக்கப்படவில்லை. விரைந்து தேர்வு முடிவுகளை வெளியிட டிஎன்பிஎஸ்சி முன்வர வேண்டும்’’என்றார்.
கூடுதல் பணியால் தாமதம்: இதுகுறித்து டிஎன்பிஎஸ்சி உயரதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘பல்வேறு விதமான தேர்வுப் பணிகளை ஒருசேர கையாள்வதால் பணிகளை திட்டமிட்ட காலத்துக்குள் முடிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதனால் குரூப் 5ஏ மட்டுமின்றி பெரும்பாலான தேர்வுகளின் முடிவுகளும் தள்ளி வைக்கப்பட்டுள்ளன.
அந்தவகையில் குரூப் 5ஏ தேர்வு விடைத்தாள் திருத்துதல் பணிகள் முடிக்கப்பட்டுவிட்டன. மதிப்பெண் பதிவேற்றம் உட்பட இறுதிகட்ட பணிகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தேர்வுமுடிவுகள் விரைவில் வெளியாகும்’’என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT