Published : 03 Jul 2023 04:13 AM
Last Updated : 03 Jul 2023 04:13 AM

பனிமய மாதா பேராலய தங்கத்தேர் திருவிழாவை முன்னிட்டு சென்னை - தூத்துக்குடி இடையே சிறப்பு ரயில்

தூத்துக்குடி: தூத்துக்குடி தூய பனிமய மாதா பேராலய தங்கத்தேர் திருவிழாவை முன்னிட்டு சென்னை- தூத்துக்குடி இடையே சிறப்பு ரயில் அறிவிக்கப்பட்டுள்ளது. விழாவில் பக்தர்கள் பங்கேற்று திரும்பிச் செல்ல வசதியாக கூடுதல் ரயில் இயக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தூத்துக்குடி தூய பனிமய மாதா பேராலயத்தில் இந்த ஆண்டு தங்கத்தேர் திருவிழா நடைபெறுகிறது. இத்திருவிழா இம்மாதம் 26-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. முக்கிய நிகழ்வான தங்கத்தேர் பவனி வரும் ஆகஸ்ட் 5-ம் தேதி நடைபெறுகிறது. இந்த விழாவில் பல லட்சம் பக்தர்கள் கலந்து கொள்வார்கள். வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் தூத்துக்குடி வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பக்தர்கள் வசதிக்காக சென்னை- தூத்துக்குடி இடையே சிறப்பு ரயில் இயக்க வேண்டும் என, தூத்துக்குடி மக்களவை தொகுதி உறுப்பினர் கனி மொழி தெற்கு ரயில்வே பொது மேலாளருக்கு கடிதம் எழுதினார். மாவட்ட பயணிகள் நலச்சங்கம் சார்பிலும் தனியாக கோரிக்கை மனு அனுப்பப்பட்டது. இந்த கோரிக்கையை ஏற்று சென்னை- தூத்துக்குடி சிறப்பு ரயிலை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இந்த சிறப்பு ரயில் (எண் 06005) 03.08.2023 அன்று சென்னை எழும்பூரில் இருந்து மாலை 4.15 மணிக்கு புறப்பட்டு மறுநாள் (ஆக.4) அதிகாலை 3.10 மணிக்கு தூத்துக்குடியை வந்தடையும். இதுபோல் மறுமார்க்கத்தில் 04.08.2023 அன்று சிறப்பு ரயில் (06006) தூத்துக்குடியில் இருந்து மதியம் 2.45 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 2.45 மணிக்கு சென்னை சென்றடையும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இந்த சிறப்பு ரயிலுக்கான முன்பதிவு நேற்று தொடங்கியுள்ளது. பயணிகள் ஆர்வமுடன் முன்பதிவு செய்து வருகின்றனர்.

கூடுதல் ரயில் இயக்க வேண்டும்: தங்கத் தேர் திருவிழாவில் ஆகஸ்ட் 4 மற்றும் 5 தேதிகளில் தான் முக்கிய நிகழ்வுகள் நடைபெறுகின்றன. குறிப்பாக ஆகஸ்ட் 5-ம் தேதி தங்கத்தேர் பவனி நடைபெறுகிறது. இதில் பங்கேற்கும் பக்தர்கள் திரும்பிச் செல்லும் வகையில் சிறப்பு ரயில் அறிவிக்கப்படவில்லை. சென்னையில் இருந்து ஆகஸ்ட் 3-ம் தேதி புறப்படும் வகையிலும், தூத்துக்குடியில் இருந்து ஆகஸ்ட் 6-ம் தேதி புறப்படும் வகையிலும் சிறப்பு ரயில் இயக்க வேண்டும் என்றே கனிமொழி எம்பி தனது கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.

மாவட்ட பயணிகள் நலச்சங்கம் அனுப்பிய கோரிக்கை மனுவில், சென்னையில் இருந்து ஆகஸ்ட் 3 மற்றும் 5-ஆம் தேதிகளிலும், தூத்துக்குடியில் இருந்து ஆகஸ்ட் 4, 6 ஆகிய தேதிகளிலும் சிறப்பு ரயில் இயக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டிருந்தது. ஆனால், விழா முடிந்து செல்லும் வகையில் ஆகஸ்ட் 6-ம் தேதி சிறப்பு ரயில் இயக்கப்படவில்லை.

இது குறித்து மாவட்ட பயணிகள் நலச்சங்க செயலாளர் மா.பிரம்மநாயகம் கூறும்போது, ‘‘பனிமய மாதா பேராலய தங்தத் தேர் திருவிழாவை முன்னிட்டு 2 சிறப்பு ரயில்களை இயக்க கோரிக்கை விடுத்திருந்தோம். ஒரு சிறப்பு ரயிலை மட்டுமே ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

ஆகஸ்ட் 5-ம் தேதி நடைபெறும் முக்கிய விழாவான தங்கத் தேர் பவனியில் பங்கேற்கும் பக்தர்கள் திரும்பி செல்ல வசதியாக கூடுதலாக ஒரு சிறப்பு ரயிலை இயக்க வேண்டும் என ரயில்வே அதிகாரிகளிடம் வலியுறுத்தியுள்ளோம். அவர்களும் பரிசீலனை செய்வதாக உறுதியளித்துள்ளனர். எனவே, கூடுதலாக ஒரு சிறப்பு ரயில் இயக்கப்படும். அதற்கான அறிவிப்பு விரைவில் வரும் என எதிர்பார்க்கிறோம்’‘ என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x