

நாகர்கோவில்: அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த போது ஊழல் செய்தது நிரூபணமானதை தொடர்ந்தே செந்தில் பாலாஜி மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
ஊழல் வாதியான அவரை காப்பாற்ற திமுக அரசு முயற்சித்து வருகிறது என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்தார். கன்னியாகுமரி மாவட்ட பரதிய ஜனதா கட்சி சார்பில் நாகர்கோவிலில் நாகராஜா திடலில் குமரி சங்கமம் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.
அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை இதில் பங்கேற்று பேசியதாவது: இங்கு கூடியுள்ள கூட்டத்தை பார்க்கும் போது வரும் மக்களவை தேர்தலில் கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் இந்தியாவிலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தல் வெற்றி பெறுவார் என்ற நம்பிக்கை இருக்கிறது. நாடாளுமன்ற புதிய கட்டிட திறப்பு விழாவின் போது பிரதமர் நரேந்திர மோடியை தமிழக அமைச்சர் மனோ தங்கராஜ் விமர்சனம் செய்தார்.
இதற்கு எந்த வகையிலும் அவருக்கு தகுதியில்லை. நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் பாஜக தொண்டரர்களை மிரட்டும் தொனியில் தொடர்ந்து பேசி வருகிறார். இதற்காக தொண்டர்களை அமைதி காக்குமாறு கேட்டுள்ளேன். . இங்கு திரண்டிருக்கும் கூட்டத்தை பார்த்த பிறகாவது பாஜகவின் பலத்தை அவர் புரிந்து கொண்டு இதுபோன்ற மிரட்டல்களை அவர் தவிர்க்க வேண்டும்.
செந்தில் பாலாஜி விவகாரத்தில் கடந்த முறை அவர் அமைச்சராக இருந்த போது ஊழல் செய்தது நிரூபணமானதை தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஆனால், ஊழல்வாதியான அவரை காப்பாற்றும் வகையில் திமுக அரசு தொடர்ந்து முயற்சித்து வருகிறது. மீனவர்களுக்காக பாஜக ஆட்சியில் தான் தனி அமைச்சகம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலிருந்து பல லட்சம் டன் மீன்கள் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
காங்கிரஸ் ஆட்சிக் காலத்துடன் ஒப்பிடும் போது மீன்பிடித் தொழில் 3 மடங்கு வளர்ச்சி அடைந்துள்ளது. மீன்பிடித் தொழிலை கடல் விவசாயம் என அறிவித்து அதற்கு முக்கியத்துவம் அளித்து பாஜக அரசு செயல்பட்டு வருகிறது. பொது சிவில் சட்டத்தால் இந்துக்களை விட கிறிஸ்தவர்களும், முஸ்லிம்களும் அதிக பயன் பெறுவார்கள்.குறிப்பாக முஸ்லிம் பெண்களுக்கு மிகவும் பாதுகாப்பாக அமையும் என்பதால் அவர்கள் ஆதரிக்கின்றனர். இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில் முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், மாவட்ட பாஜக தலைவர் தர்மாஜ், எம்.எல்.ஏ-க்கள் நயினார் நாகேந்திரன், எம்.ஆர். காந்தி, மாநில நிர்வாகிகள் மீனாதேவ், உமாரதி மற்றும் திரளான தொண்டர்கள் கலந்து கொண்டனர்.