

அரக்கோணம்: ‘இந்து தமிழ் திசை' செய்தி எதிரொலியாக அன்வர்திகான்பேட்டை ரயில் நிலையம் அருகே சிறுபாலத்தின் பக்கவாட்டு சுவர்கள் கட்டும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த அன்வர்திகான் பேட்டை பஜார் வீதியின் இருபுறமும் மழைநீர் வெளியேறுவதற்காக கால்வாய் அமைக்கப்பட்டது. இதிலிருந்து வெளியேறும் கழிவுநீர் அன்வர்திகான்பேட்டை பேருந்து நிலையம் அருகே உள்ள சிறுபாலத்தை கடந்து, மேல் களத்தூர் ஏரிக்கு செல்லும் வகையில் கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த சிறுபாலம் சேதமடைந்து மழைநீர் வெளியேற முடியாமல் தேங்கி நின்றது. இதனால், சுகாதாரச் சீர்கேடும் ஏற்பட்டு வந்தது. இதையடுத்து, நெடுஞ்சாலைத்துறை சார்பில் அப்பகுதியில் புதிதாக சிறுபாலம் அமைக்கப்பட்டது.
ஆனால், அதன் இருபுறமும் பக்கவாட்டு சுவர்கள் அமைக்கப்படாமல் இருந்ததால், வாகனங்கள் மற்றும் பொதுமக்கள் நிலை தடுமாறி பள்ளத்தில் விழும் அபாயம் உள்ளதாக கடந்த மாதம் 24-ம் தேதி ‘இந்து தமிழ் திசை' நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது.
இதன் எதிரொலியாக தற்போது, அங்கு நெடுஞ்சாலை துறை சார்பில் பக்கவாட்டு சுவர்கள் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மக்கள் நலன் கருதி அதிகாரிகள் விரைந்து பணிகள் மேற்கொண்டதற்கு அப்பகுதி மக்கள் நன்றியை தெரிவித்துள்ளனர்.