செந்தில் பாலாஜி பதவி நீக்க விவகாரம் - அட்டர்னி ஜெனரலுக்கு ஆளுநர் கடிதம்

செந்தில் பாலாஜி பதவி நீக்க விவகாரம் - அட்டர்னி ஜெனரலுக்கு ஆளுநர் கடிதம்
Updated on
1 min read

சென்னை: செந்தில் பாலாஜி விவகாரம் தொடர்பாக மத்திய அரசின் தலைமை வழக்கறிஞருக்கு (அட்டர்னி ஜெனரல்) ஆளுநர் கடிதம் எழுதியுள்ளார்.

சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜியை சென்னை பசுமை வழி சாலையில் உள்ள அவரது அரசு இல்லத்தில் அமலாக்கத் துறையினர் கடந்த 14-ம் தேதி அதிகாலை கைது செய்தனர். அவர் நெஞ்சு வலிப்பதாக கூறியதால், ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பின்னர், தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, அவருக்கு இதய பைபாஸ் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அவரிடம் இருந்த மின்துறை, அமைச்சர் தங்கம் தென்னரசுக்கும், மதுவிலக்கு, ஆயத்தீர்வை துறை, அமைச்சர் முத்துசாமியிடமும் ஒப்படைக்கப்பட்டன.

இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி நீடிப்பார் என்று அறிவிக்கப்பட்டது. இதை ஏற்காத ஆளுநர், அமைச்சரவையில் இருந்து அவரை நீக்கி கடந்த 29-ம்தேதி உத்தரவிட்டார். சில மணி நேரங்களில் மீண்டும் ஓர் அறிவிப்பை ஆளுநர் வெளியிட்டார். ‘இதுதொடர்பாக மத்திய அட்டர்னி ஜெனரலிடம் கருத்து கேட்க இருக்கிறேன். எனவே, என்னிடம் இருந்து அடுத்த தகவல் வரும் வரை பதவி நீக்க உத்தரவு நிறுத்தி வைக்கப்படுகிறது’ என்று அதில் குறிப்பிட்டிருந்தார்.

இதற்கிடையே, மூத்த அமைச்சர்கள், சட்ட நிபுணர்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். இந்த விவகாரத்தில் ஆளுநர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கவும் முடிவு செய்யப்பட்டது.

இந்நிலையில், செந்தில் பாலாஜி விவகாரம் தொடர்பான நீண்ட கடிதத்தை மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் (அட்டர்னி ஜெனரல்) ஆர்.வெங்கட்ரமணிக்கு ஆளுநர் ரவி எழுதியுள்ளார். அதற்கு ஓரிரு நாளில் அட்டர்னி ஜெனரல் பதில் அளிப்பார் என்று கூறப்படுகிறது. இதில் அடுத்தகட்ட நடவடிக்கை என்ன என்பது, அதன் பிறகே தெரியவரும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in