Published : 02 Jul 2023 09:25 AM
Last Updated : 02 Jul 2023 09:25 AM
சென்னை: அடிப்படை உரிமைகளுக்காகப் போராடும் மக்கள் மீது காவல் துறையை ஏதுவதை அரசு கைவிட வேண்டும் என்று நிவானோ அமைதிப் பரிசு பெற்ற பி.வி.ராஜகோபால் தெரிவித்துள்ளார்.
ஜப்பான் நாட்டின் டோக்கியோ நகரில் உள்ள நிவானோ அமைதி அறக்கட்டளையின் 40-வது நிவானோ அமைதிப் பரிசு, கேரள மாநிலத்தைச் சேர்ந்த பி.வி.ராஜகோபாலுக்கு கடந்த ஜூன் மாதம் வழங்கப்பட்டது. நலிவடைந்த, ஒடுக்கப்பட்ட, அடித்தட்டு மக்களின் நல்வாழ்வுக்காகப் பாடுபடும் அகில இந்திய ஏக்தா பரிஷத் நிறுவனத்தின் தலைவராக அவர் செயல்பட்டு வருகிறார்.
காந்திய வழியில், ஆக்கப்பூர்வமான பணிகளை முன்னெடுத்து வரும் இவருக்கு, சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காந்தி அமைதி நிலையம் சார்பில் நேற்று பாராட்டு விழா நடைபெற்றது. சர்வமத பிரார்த்தனையுடன் தொடங்கிய இந்த நிகழ்ச்சியில், பல்வேறு மதத் தலைவர்கள் பங்கேற்று, அவருக்குப் பாராட்டுத் தெரிவித்தனர்.
இந்த நிகழ்ச்சியில் பி.வி.ராஜகோபால் பேசியதாவது: நாடு சுதந்திரமடைந்து 75 ஆண்டுகளாகியும், ஏழைகளுக்கு உரிய நீதி கிடைக்கவில்லை. அடிப்படை உரிமைகளுக்காகப் போராடும் மக்கள் மீது காவல் துறையை ஏவுவதை அரசு கைவிட வேண்டும். மக்கள் குடிநீர் கோரி போராடினால், அவர்களை ஆட்சியர் சந்தித்து, உரிய துறையிடம் பேசி, குடிநீரைப் பெற்றுத் தர வேண்டும்.
அதைவிடுத்து, காவல் துறையை அனுப்பி போராட்டத்தை ஒடுக்குவதால் பயனில்லை. போலீஸாரால் எந்த தீர்வும் அளிக்க முடியாது. கிராம அளவில் மக்கள் தன்னிறைவு பெற வேண்டும் என்பதே மகாத்மா காந்தியின் கனவாக இருந்தது. இவ்வாறு அவர் பேசினார். இந்த நிகழ்ச்சியில், காந்தி அமைதி நிலையச் செயலர் சூ.குழந்தைசாமி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT