

புதுக்கோட்டை: வேங்கைவயல் சம்பவம் தொடர்பாக புதுக்கோட்டை மாவட்ட வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் மீண்டும் ஆஜரான 8 பேர், டிஎன்ஏ பரிசோதனைக்கு விருப்பம் இல்லை என எழுத்துப் பூர்வமாக தெரிவித்தனர்.
புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் மேல் நிலை நீர்த் தேக்கத் தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக சிபிசிஐடி போலீஸார் விசாரித்து வருகின்றனர். இதில், முதல்கட்டமாக வேங்கைவயல், முத்துக்காடு பகுதிகளைச் சேர்ந்த 11 பேரிடம் டிஎன்ஏ பரிசோதனை நடத்துவதற்கு கடந்த ஏப்ரலில் சிபிசிஐடி போலீஸார் சம்மன் கொடுத்திருந்த நிலையில், ஒரு காவலர் உட்பட 3 பேர் மட்டுமே ஆஜராகினர்.
அவர்களின் ரத்த மாதிரி சேகரிக்கப்பட்டு, சென்னையில் உள்ள தடய அறிவியல் ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மீதியுள்ள 8 பேர் இந்த சோதனைக்கு மறுப்பு தெரிவித்து, உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தனர். அந்த வழக்கில், “8 பேரும் சோதனைக்கு உட்பட வேண்டும், அவர்களை சிபிசிஐடி போலீஸார் உரிய வகையில் நடத்த வேண்டும்” என நீதிமன்றம் அறிவுறுத்தியது.
இதைத் தொடர்ந்து, புதுக்கோட்டை மாவட்ட வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் 8 பேரும் நேற்று முன்தினம் ஆஜராகினர். அப்போது, இவர்களிடம் விசாரணை செய்த நீதிபதி எஸ்.ஜெயந்தி, வழக்கு விசாரணையை நேற்றைக்கு ஒத்திவைத்திருந்தார். அதன்படி, அனைவரும் நீதிபதி முன்பு நேற்று மீண்டும் ஆஜராகினர்.
அப்போது, “நாங்கள் அனைவரும் பாதிக்கப்பட்டவர்கள்தான். எனவே, எங்களிடம் இருந்து டிஎன்ஏ பரிசோதனைக்கு ரத்த மாதிரி எடுத்துக்கொள்ள விருப்பம் இல்லை” என எழுத்துப் பூர்வமாக தாக்கல் செய்தனர். சிபிசிஐடி தரப்பில், “அந்தப் பகுதியில் 169 பேரிடம் டிஎன்ஏ பரிசோதனை செய்ய திட்டமிட்டுள்ளோம்.
அதில் ஒரு பகுதிதான் இந்த 8 பேர். இந்த வழக்கில் வேறு ஆதாரம் எதுவும் கிடைக்காததால், இந்த பரிசோதனை அவசியமாகிறது” என விளக்கம் அளித்தனர். இருதரப்பு விளக்கங்களையும் பதிவு செய்த நீதிபதி, வழக்கு விசாரணையை ஜூலை 4-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.