

காரைக்குடி: சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் திமுக மகளிரணி சார்பில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பக்தி பாடலுக்கு பெண்கள் சிலர் சாமியாட்டம் ஆடினர்.
காரைக்குடி ஐந்துவிளக்கு பகுதியில் திமுக மகளிரணி மற்றும் மகளிர் தொண்டரணி சார்பில் நேற்றிரவு கருணாநிதி நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு வந்திருந்த பெண்கள் எழுந்து செல்லாமல் இருக்க, பாட்டு கச்சேரி நடைபெற்றது.
அப்போது கருப்புச்சாமி பாடல் பாடப்பட்டது. இதை கேட்ட 5-க்கும் மேற்பட்ட பெண்கள் திடீரென எழுந்து சாமியாட்டம் ஆடினர். இதில் சில பெண்கள் மயக்கமடைந்தனர். இதை பார்த்த திமுகவினர் பாடலை நிறுத்த சொல்லி, தொடர்ந்து மயக்கமான பெண்களுக்கு தண்ணீர் தெளித்து அமர வைத்தனர்.
பின்னர் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன், மாவட்டத் துணைச் செயலாளர்கள் சேங்கைமாறன், மணிமுத்து, நகராட்சித் தலைவர் முத்துத்துரை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.