

மதுரை: சாட்சிகள் மிரட்டப்படும் குற்ற வழக்குகளை தினமும் விசாரித்து முடிக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் குறும்பூரைச் சேர்ந்தவர்கள் சிவபெருமாள் என்ற சிவா, முத்துராஜா என்ற பாபுராஜா. இவர்கள் இருவரும் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளனர். ஜாமீன் கோரி உயர் நீதிமன்றத்தில் இருவரும் மனு தாக்கல் செய்தனர்.
இந்த மனுவை நீதிபதி ஜி.கே.இளந்திரையன் விசாரித்தார். மனுதாரர் வழக்கறிஞர் வாதிடுகையில், மனுதாரர்கள் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர். பின்னர் குண்டர் சட்ட உத்தரவை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது. மனுதாரர்களுக்கும் கொலைக்கும் சம்பந்தம் இல்லை. எனவே ஜாமீன் வழங்க வேண்டும் என்றார்.
அரசு சிறப்பு வழக்கறிஞர் ஆர்.எம்.அன்புநிதி வாதிடுகையில், கொலை செய்யப்பட்டவரின் சகோதரர் சில மாதங்களுக்கு முன்பு கொலை செய்யப்பட்டார். அந்த வழக்கில் முக்கிய சாட்சியாக இருப்பவரை சாட்சி சொல்ல விடாமல் தடுக்கும் வகையில் பழிக்குபழியாக கொலை செய்துள்ளனர். முதல் மனுதாரர் மீது 5 வழக்கும், 2வது மனுதாரர் மீது 3 வழக்கும் நிலுவையில் உள்ளன. இவர்களுக்கு ஜாமீன் வழங்கினால் சாட்சிகளை மிரட்டுவார்கள். இதனால் ஜாமீன் வழங்காமல் கீழமை நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கை விரைவில் முடிக்க வேண்டும் என்றார்.
பின்னர் நீதிபதி பிறப்பித்த உத்தரவு: குற்ற வழக்குகளில் விசாரணை நியாயமாக நடைபெறுவது முக்கியமானது. வழக்கு விசாரணை எந்தவித மிரட்டலும் இல்லாமல் நியாயமாக நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டியது நீதிமன்றங்களின் கடமையாகும். எதிரிகள், பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சமூகத்தின் நலனுக்காக நியாயமான விசாரணை நடைபெற வேண்டும். அதற்கு எந்த சூழ்நிலையிலும் பாதிப்பு வரக்கூடாது.
சாட்சிகள் பாதுகாப்பு சட்டத்தில், சாட்சிகளுக்கு அச்சுறுத்தல் இருந்தால் அந்த வழக்கை ஒத்திவைப்பு இல்லாமல் தினமும் விசாரித்து சாட்சிகளின் வாக்குமூலம் பதிவு செய்யப்படுவதை உறுதி செய்ய வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்றமும் சாட்சிகள் மிரட்டப்பட்டால் வழக்கு விசாரணையை தினமும் நடத்தி முடிக்க வேண்டும் எனக் கூறியுள்ளது.
இதனை ஒவ்வொரு வழக்கு விசாரணையின் போதும் பின்பற்றுமாறு அனைத்து காவல் அதிகாரிகளுக்கும் டிஜிபி சுற்றறிக்கை அனுப்ப வேண்டும். இந்த வழக்கில் மனுதாரர்களின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. மனுதாரர்கள் மீதான வழக்கை 3 மாதத்தில் விசாரித்து முடிக்க வேண்டும். இவ்வாறு நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.