தி.மலை பவுர்ணமி கிரிவலம் | வேலூர், விழுப்புரத்தில் இருந்து 3 சிறப்பு ரயில்கள் 2 நாட்களுக்கு இயக்கம்

தி.மலை பவுர்ணமி கிரிவலம் | வேலூர், விழுப்புரத்தில் இருந்து 3 சிறப்பு ரயில்கள் 2 நாட்களுக்கு இயக்கம்
Updated on
1 min read

திருவண்ணாமலை: திருவண்ணாமலை பவுர்ணமி கிரிவலத்துக்கு வேலூர் மற்றும் விழுப்புரத்தில் இருந்து 3 சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது.

சென்னை கடற்கரையில் இருந்து வேலூர் கன்டோன்மெண்ட் ரயில் நிலையம் வரை இயக்கப்படும் மெமு ரயில், பவுர்ணமியையொட்டி திருவண்ணாமலை வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. வேலூரில் இருந்து நாளை (ஜுலை 2ம் தேதி) இரவு 9.50 மணிக்கு புறப்பட்டு, கனியம்பாடி, கண்ணமங்கலம், ஆரணி சாலை, போளூர், அகரம் சிப்பந்தி, துரிஞ்சாபுரம் வழியாக திருவண்ணாமலையை நள்ளிரவு 12.05 மணிக்கு வந்தடைகிறது.

பின்னர், திருவண்ணாமலையில் இருந்து மறுநாள் (3ம் தேதி) அதிகாலை 3.45 மணிக்கு புறப்பட்டு, வந்த வழித்தடத்தில் இயக்கப்பட்டு வேலூரை காலை 5.35 மணிக்கு சென்றடைகிறது. திருவண்ணாமலையில் இருந்து வேலூர், அரக்கோணம் வழியாக சென்னை கடற்கரைக்கு பயணிக்கலாம்.

மயிலாடுதுறையில் இருந்து விழுப்புரம் வரை இயக்கப்படும் பயணிகள் ரயில், திருவண்ணாமலை வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. விழுப்புரத்தில் இருந்து நாளை மறுநாள் (ஜுலை 3-ம் தேதி) காலை 9.15 மணிக்கு புறப்பட்டு வெங்கடேசபுரம், மாம்பழப்பட்டு, ஆயந்தூர், திருக்கோவிலூர், ஆதிச்சநல்லூர், அண்டம்பள்ளம், தண்டரை வழியாக திருவண்ணாமலையை முற்பகல் 11 மணிக்கு வந்தடைகிறது.

பின்னர், திருவண்ணாமலையில் இருந்து பகல் 12.40 மணிக்கு புறப்பட்டு, வந்த வழித்தடம் வழியாக விழுப்புரத்தை பிற்பகல் 2.15 மணிக்கு சென்றடைகிறது. திருவண்ணாமலையில் இருந்து விழுப்புரம், பண்ரூட்டி, கடலூர், சிதம்பரம், வைத்தீஸ்வரன்கோயில் வழியாக மயிலாடுதுறைக்கு பயணிக்கலாம்.

தாம்பரத்தில் இருந்து விழுப்புரம் வரை இயக்கப்படும் மெமு ரயில், திருவண்ணாமலை வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. விழுப்புரத்தில் இருந்து நாளை (ஜுலை 2ம் தேதி) இரவு 9.15 மணிக்கு புறப்படும் மெமு ரயில், வெங்கடேசபுரம், மாம்பழப்பட்டு, ஆயந்தூர், திருக்கோவிலூர், ஆதிச்சநல்லூர், அண்டம்பள்ளம், தண்டரை வழியாக திருவண்ணாமலையை இரவு 10.45 மணிக்கு வந்தடைகிறது.

பின்னர், திருவண்ணாமலையில் இருந்து திங்கள்கிழமை (ஜுலை 3ம் தேதி) அதிகாலை 3.30 மணிக்கு புறப்பட்டு விழுப்புரத்தை காலை 5 மணிக்கு சென்றடைகிறது. திருவண்ணாமலையில் இருந்து விழுப்புரம், திண்டிவனம், மேல்மருவத்தூர், செங்கல்பட்டு வழியாக தாம்பரம் வரை பயணிக்கலாம்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in