

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூரில் நேற்று முன்தினம் இரவு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் மழையிலும் திரளான தொண்டர்கள் பங்கேற்றதால் நிர்வாகிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
மேலும், மயிலாடுதுறை மக்களவைத் தொகுதியை குறி வைத்து பாஜக தேர்தல் வேலைகளை தொடங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது. பிரதமர் மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசின் 9 ஆண்டுகால சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் திருக்கடையூரில் நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது.
இக்கூட்டத்தில் பேசிய அண்ணாமலை, வழக்கமான அரசியல் பேச்சை தாண்டி, டெல்டா பகுதியினரை கவரும் வகையில் விவசாயிகளுக்கு, மீனவர்களுக்கு மத்திய அரசு என்னவெல்லாம் செய்தது, தமிழக அரசு என்னவெல்லாம் செய்யத் தவறியது என்பதை பட்டியலிட்டுப் பேசினார். இறுதியாக இங்கிருந்து ஒரு எம்.பி வரவேண்டும் என்பது பாஜகவினரின் ஆசை என்றார்.
இதனால், மயிலாடுதுறை மக்களவைத் தொகுதியை குறி வைத்து பாஜக தேர்தல் வேலைகளை தொடங்கியுள்ளதாக நிர்வாகிகள் தெரிவித்தனர். இது குறித்து பாஜக மாநில செயற்குழு உறுப்பினரான வழக்கறிஞர் கே.ராஜேந்திரன் ‘இந்து தமிழ்’ நாளிதழிடம் கூறியது: இக்கூட்டத்தில் 27 ஆயிரம் பேர் பங்கேற்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டது.
மழையால் சற்று பாதிப்பு ஏற்பட்டது. கூட்டத்தில் சுமார் 13 ஆயிரம் பேர் பங்கேற்றனர். தமிழகத்தில் பாஜக வலுவாக இல்லாத காலக் கட்டத்திலேயே மயிலாடுதுறை சட்டப்பேரவை தொகுதி, நகர்மன்றம் போன்றவற்றில் பாஜகவை மக்கள் அங்கீகரித்துள்ளனர். இப்போது மயிலாடுதுறையிலிருந்து பாஜக எம்.பி ஒருவர் வரவேண்டும் என்று எதிர்பார்ப்பது இயல்புதானே? என்றார்.
பொதுக்கூட்டத்தின்போது மழை பெய்தபோதும், அங்கு திரண்டிருந்த தொண்டர்கள் நாற்காலிகளை குடைபோல பிடித்துக் கொண்டு நின்றனர். இதனால், அண்ணாமலையும் மழையில் நனைந்தவாறே பேசினார். இந்தக் கூட்டத்தில், 6,500 பேர் பங்கேற்றதாக உளவுத் துறையினர் கூறியுள்ள நிலையில், பாஜக வளர்ந்துள்ளது போன்ற மாயை உருவாக்கப்படுவதாகவும், பெரும்பாலானோர் பணம் கொடுத்து அழைத்து வரப்பட்டவர்கள் என்றும் திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சியினர் கூறுகின்றனர்.