

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் உள்ள அம்மன் சன்னதி கருவறை முன்பு நடிகர் ரஜினிகாந்த் இன்று (ஜுலை 1) தரிசனம் செய்த புகைப்படம் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
திருவண்ணாமலையைச் சுற்றியுள்ள கிராமங்களில் கடந்த 5 நாட்களாக நடைபெற்று வந்த 'லால் சலாம்' படப்பிடிப்பில் பங்கேற்ற நடிகர் ரஜினிகாந்த், திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் சனிக்கிழமை சுவாமி தரிசனம் செய்தார். மூலவர் மற்றும் அம்மன் சன்னதியில் வழிபாடு செய்த அவருக்கு, சிவாச்சாரியார்கள் பிரசாதம் வழங்கினர்.
இந்நிலையில், அண்ணாமலையார் கோயிலில் உள்ள அம்மன் சன்னதியில் தரிசனம் செய்த நடிகர் ரஜினிகாந்த்துக்கு, சிவாச்சாரியார்கள் பிரசாதம் வழங்கும் புகைப்படம் வெளியாகி சமூக வலைதளத்தில் வைரலானது. இந்தப் புகைப்படம், அம்மன் கருவறை முன்பு எடுக்கப்பட்டுள்ளது. மூலவர் மற்றும் அம்மன் கருவறை முன்பு புகைப்படம், வீடியோ எடுக்க அனுமதியில்லை. சுவாமி கருவறை முன்பு கோயில் ஊழியர்கள் கண்காணிப்பு பணியில் இருப்பார்கள்.
இந்து முன்னணி கண்டனம்: இந்தநிலையில், அம்மன் கருவறை முன்பு நடிகர் ரஜினிகாந்த் தரிசனம் செய்யும் புகைப்படம் எடுத்து வெளியிடப்பட்டுள்ளது அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு இந்து முன்னணி கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து மாவட்ட பொது செயலாளர் இரா.அருண்குமார் கூறும்போது, “கடவுள் முன்பு அனைவரும் சமம். யாராக இருந்தாலும், கருவறை முன்பு புகைப்படம் எடுக்க அனுமதியில்லை. கருவறை முன்பு புகைப்படம் எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளதை இந்து முன்னணி வன்மையாக கண்டிக்கிறது. புகைப்படம் எடுத்தவர் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுத்து கைது செய்ய வேண்டும்” என்றனர்.
புகைப்படம் சர்ச்சை குறித்து அண்ணாமலையார் கோயில் தரப்பில் கேட்டபோது, “திருப்பதி ஏழுமலையான் கோயிலை போன்று, திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலிலும் செல்போன் கொண்டு செல்ல தடை விதிக்க வேண்டும். கோயிலில் உள்ள தங்க கொடி மரத்தை கடந்து செல்போன் பயன்படுத்த அனுமதியில்லை. அம்மன் சன்னதியில் நடிகர் ரஜினிகாந்த் தரிசனம் செய்தபோது, யாரோ ஒருவர் செல்போனில் புகைப்படம் எடுத்துள்ளார்” என்றனர். பக்தர்கள் தரப்பில் கூறும்போது, “கண்காணிப்பு பணியில் கோயில் ஊழியர்கள் இருக்கும்போது, அவர்களை மீறி வெளிநபர்கள் புகைப்படம் எடுக்க முடியுமா?. புகைப்படம் எடுத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என வலியுறுத்தி உள்ளனர்.
விசாரணை நடத்தி நடவடிக்கை... - இது குறித்து இந்து சமய அறநிலையத் துறை மண்டல இணை ஆணையர் சுதர்சன் கூறும்போது, “அண்ணாமலையார் கோயிலில் அம்மன் சன்னதி முன்பு நடிகர் ரஜினிகாந்த் தரிசனம் செய்வதுபோன்ற புகைப்படம் வெளியாகி உள்ளது குறித்து எனது கவனத்துக்கு வந்துள்ளது. இது தொடர்பாக நேரில் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.