Published : 01 Jul 2023 04:16 PM
Last Updated : 01 Jul 2023 04:16 PM
சென்னை: சென்னையில் ரூ.232 கோடி ரூபாய் செலவில் உட்புற பகுதிகளில் 60 கி.மீ நீளத்திற்கு சிறிய மழைநீர் வடிகால் கால்வாய் அமைக்கப்பட உள்ளதாக சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
காலநிலை மாற்றம் நடவடிக்கை மாதம் இன்று தொடங்கி இந்த மாதம் முழுவதும் நடைபெறுகிறது. இதன் ஒரு பகுதியாக சென்னை மீனம்பாக்கத்தில் உள்ள ஏ.எம்.ஜெயின் கல்லூரியில் காலநிலை மாற்றம் தொடர்பாக சிட்டிசன் கன்ஸ்யூமர் அண்ட் சிவிக் ஆக்க்ஷன் குரூப் (CAG) சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் கலந்துகொண்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஆனையர் ராதாகிருஷ்ணன், "காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள தமிழக அரசு செயல்திட்ட அறிக்கையை வடிவமைத்துள்ளது. வல்லுனர்களின் கருத்தை பெற்று சென்னை மாநகராட்சியும் செயல்திட்ட அறிக்கையை வடிவமைத்துள்ளது. கரோனா காலகட்டத்தில் வல்லுநர்களின் கருத்தை ஏற்று பொதுமக்கள் பங்களிப்பு மற்றும் ஒத்துழைப்புடன் கரோனாவை எதிர் கொண்டு வெற்றி பெற்றோமோ, அதேபோல் காலநிலை மாற்றத்தை ஒவ்வொரு தனி மனிதரின் விழிப்புணர்வு மற்றும் செயல்பட்டால் நிச்சயம் எதிர்கொண்டு வெற்றிபெற முடியும்.
விரிவாக்கம் செய்யப்பட்ட சென்னையில் வளர்ச்சி பணிகள் நடைபெற்று வருகிறது. அதனை விரைந்து முடிப்பதற்காக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. பணிகள் முடிந்த இடத்தில் சாலைகள் அமைத்து போக்குவரத்து சீர் செய்வதற்கான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. வளர்ச்சி பணிகள் என்பதால் ஒரே நாளில் முடிக்க முடியாது. ஆனால் விரைவாக முடிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
சென்னையின் மழைநீர் வடிகால் பணிகள் அமைக்கும் பணி 98% நிறைவடைந்துள்ளது. கால்வாய் இணைக்கும் பணிகள் மட்டுமே நடைபெற்ற வருகிறது. ஒவ்வொரு மண்டலங்களிலும் உட்புற பகுதிகளில் சிறிய மழைநீர் வடிகால் கால்வாய் அமைப்பதற்கு மண்டல தலைவர்கள் ஆலோசனை வழங்கியிருக்கிறார்கள். அதனை ஏற்று தற்போது 232 கோடி ரூபாய் மதிப்பில் 60 கி.மீ நீளத்துக்கு சிறு மற்றும் குறு மழைநீர் வடிகால் கால்வாய் அமைக்கப்பட உள்ளது" என்று அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT