

சென்னை: செந்தில் பாலாஜி விவகாரத்தில் ஆளுநர் செயல்பட்ட விதம் குறித்து மூத்த அமைச்சர்கள், சட்ட நிபுணர்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். ஆளுநரின் செயல்பாடு அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரானது என்பதால் அவர் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ள அரசு முடிவு செய்துள்ளது.
தமிழக அமைச்சரவையில் இருந்து செந்தில் பாலாஜியை நீக்கம் செய்து ஆளுநர் ஆர்.என்.ரவி நேற்று முன்தினம் இரவு உத்தரவிட்டார். இதற்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் மற்றும் சட்ட நிபுணர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். 5 மணி நேர ஆலோசனைக்கு பிறகு, செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்குவது குறித்த உத்தரவை நிறுத்தி வைப்பதாக முதல்வருக்கு ஆளுநர் கடிதம் அனுப்பினார். இதுதொடர்பாக மத்திய அட்டர்னி ஜெனரலின் கருத்தை கேட்டு செயல்படுவதுதான் சரியாக இருக்கும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அறிவுறுத்தியுள்ளார். அதனால், அவரிடம் கருத்து கேட்க இருக்கிறேன். அதுவரை பதவி நீக்க உத்தரவு நிறுத்தி வைக்கப்படுகிறது என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில், செந்தில் பாலாஜி விவகாரத்தில் ஆளுநர் செயல்பட்ட விதம் குறித்து மூத்த அமைச்சர்கள், சட்ட நிபுணர்களுடன் தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஸ்டாலின் நேற்று ஆலோசனை நடத்தினார். சட்ட அமைச்சர் ரகுபதி, தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம், எம்.பி.க்களான மூத்த வழக்கறிஞர்கள் என்.ஆர்.இளங்கோ, பி.வில்சன் மற்றும் உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.
இதில் அடுத்தகட்டமாக என்ன நடவடிக்கை மேற்கொள்வது என்று விரிவாக ஆலோசிக்கப்பட்டது. பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய என்.ஆர்.இளங்கோ, ‘‘ஆளுநரின் செயல்பாடு அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரானது என்பதால் சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொள்ள அரசு முடிவு செய்துள்ளது’’ என்று தெரிவித்தார்.