Published : 01 Jul 2023 06:55 AM
Last Updated : 01 Jul 2023 06:55 AM

ஆளுநர் நடவடிக்கை உள்நோக்கம் கொண்டது - அமைச்சர் தங்கம் தென்னரசு குற்றச்சாட்டு

சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்பான ஆளுநரின் நடவடிக்கை அரசியல் உள்நோக்கம் கொண்டது என்று அமைச்சர் தங்கம் தென்னரசு குற்றம்சாட்டியுள்ளார்.

செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்குவதாக நேற்று முன்தினம் மாலை அறிவித்த ஆளுநர் ஆர்.என்.ரவி,இரவே அந்த உத்தரவை நிறுத்திவைப்பதாக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் எழுதினார்.

இந்நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் நிதி யமைச்சர் தங்கம் தென்னரசு, சட்டத் துறை அமைச்சர் எஸ்.ரகுபதி, திமுக எம்.பி. வில்சன் ஆகியோர் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியதாவது:

அவசரகதியில் செயல்பாடு: ஓர் அமைச்சரை பதவியில் இருந்து நீக்க ஆளுநருக்கு எந்த அதிகாரமும் இல்லை. சட்டப்படி சந்திப்போம் என்று முதல்வர் தெரிவித்ததை தொடர்ந்து, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ஆளுநரை அழைத்து ‘‘அவசர கதியில் செயல்பட்டுள்ளீர்கள், அட்டர்னி ஜெனரலின் கருத்தைக் கேட்காமல் செய்துள்ளீர்கள்’’ என்று இடித்துரைத்துள்ளார். அதன் பின்னரே, அந்த கடிதத்தை நிறுத்தி வைப்பதாக, தமிழக முதல்வருக்கு ஆளுநர் கடிதம் அனுப்பியுள்ளார்.

எந்த அறிவுரையும் பெறாமல்,ஆளுநர் அவராக முடிவெடுத்து அறிவித்ததை அரசு முற்றிலுமாக நிராகரிக்கிறது.மாநில முதல்வரின் அறிவுரை இல்லாமல், அமைச்சர் ஒருவரை ஆளுநர் தன்னிச்சையாக நீக்குவது, நியமிப்பது போன்ற அதிகாரத்தை கையில் எடுப்பதை ஏற்க முடியாது.

ஒருவர் மீது குற்றம்சாட்டப்பட்டாலே, அவரைத் தகுதி நீக்கம் செய்ய முடியாது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீது குற்றச்சாட்டுகள் இருந்தபோதும் அவர் முதல்வராகத் தொடர்ந்தார். மத்திய அமைச்சர்கள் மீது வழக்குகள் இருக்கும் நிலையில், அவர்கள் நீக்கப்பட்டுள்ளார்களா? செந்தில் பாலாஜி மீது மட்டும் அவசர நடவடிக்கை ஏன்? இது முற்றிலும் அரசியல் உள்நோக்கம் கொண்டது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இக்கட்டான சூழல்களில்...: அரசியல் சாசனத்தின் 154, 163,164 பிரிவுகளை இக்கட்டான சூழல்களில் பயன்படுத்தி, இதுபோன்ற முடிவுகள் எடுக்கலாம் என ஆளுநர் கூறியுள்ளாரே? என்று செய்தியாளர்கள் கேட்டனர்.

அதற்குப் பதில் அளித்த திமுகஎம்.பி., வில்சன், ‘‘அந்தப் பிரிவுகளை நன்றாகப் படித்தாலே, அவருக்கு அதிகாரம் இல்லை என்பது புரியும். அரசியல் சாசனப்படி ஆளுநர் நடக்கவில்லை. உச்ச நீதிமன்றமே, ‘அமைச்சரவையின் ஆலோசனைப்படி ஆளுநர் நடக்காவிட்டால், அவரது முடிவுகள் செல்லாது’ என்று கூறியுள்ளது. மேலும், அமைச்சர் நியமனம் முதல்வரின் விருப்பம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வழக்கு விசாரணையின்போதே, அவர் அமைச்சராக இருக்கக் கூடாது என்று ஆளுநர் எப்படி கூற முடியும்? இப்படியே விட்டால், நாளை நீதிபதியை டிஸ்மிஸ் செய்வதாக ஆளுநர் கூறுவார்’’ என்றார்.

விசாரணை பாதிக்குமா?: அமைச்சராக செந்தில் பாலாஜி நீடித்தால், அமலாக்கத் துறை விசாரணை பாதிக்கும் என ஆளுநர் கூறியுள்ளாரே? என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, சட்ட அமைச்சர் எஸ்.ரகுபதி, ‘‘செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக உள்ள நிலையில், அவர் எந்த விசாரணையிலும் குறுக்கிட வேண்டிய அவசியம் இல்லை. மத்திய அமைச்சர்கள் பலர் மீது வழக்குகள் இருக்கும்போது, அவர்கள் அமைச்சர்களாக தொடர்கின்றனர்’’ என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x