Published : 01 Jul 2023 07:06 AM
Last Updated : 01 Jul 2023 07:06 AM

எழுத்தாளர், பேச்சாளர், சிறந்த நிர்வாகி என பன்முகத் தன்மையில் மிளிர்ந்த இறையன்பு

தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு நேற்று பணி ஓய்வு பெற்றார். இதையொட்டி அவருக்கு சால்வை அணிவித்து, பணிப் பாராட்டு கடிதம் வழங்கிய முதல்வர் மு.க.ஸ்டாலின்.

சென்னை: தமிழக தலைமைச் செயலராக 2 ஆண்டுகள் பணியாற்றி ஓய்வுபெற்ற வெ.இறையன்பு, எழுத்தாளர், பேச்சாளர், சிறந்த நிர்வாகி என பன்முகத்தன்மை பெற்றவர். மரபுகளை ஒதுக்கிவைத்துவிட்டு, உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த வெங்கடேஷ் நேரில் சென்று அவரை வாழ்த்தியது, அவரது பணிக்கு சிறப்பைச் சேர்த்துள்ளது.

2021-ல் திமுக அரசு பொறுப்பேற்றதும் தலைமைச் செயலராக நியமிக்கப்பட்டார் இறையன்பு. 1987-ம் ஆண்டு தமிழகப் பிரிவு ஐஏஎஸ் அதிகாரியான இவர், பல்வேறு பொறுப்புகளுக்குப் பின்னர், அரசின் தலைமைச் செயலராகஉயர்ந்தார். ஒவ்வொரு நிலையிலும் பாராட்டத்தக்க பணிகளை மேற்கொண்ட இறையன்பு, கிராமப்புற ஏழைகள் தொடர்பான விஷயங்களில் மிகுந்த கவனம் செலுத்தியுள்ளார். மேலும், அரசின் நிர்வாகத்தில் வெளிப்படைத் தன்மையை உறுதிப்படுத்துவதில் கவனம் செலுத்தினார்.

அரசு அலுவலகங்களில் திருக்குறள், தமிழ்க் கலைச்சொல்லை எழுதி வைக்க வேண்டும் என்ற அரசாணையைப் பின்பற்றுமாறு வலியுறுத்தினார். முற்றிலும் தமிழ் வழியில் படித்தவர்களுக்கு 20 சதவீதம் இடஒதுக்கீடு என்பதை முறைப்படுத்தி, அரசாணை வெளியிட்டார். கிராமங்களில் மக்களுக்கு தகவல் தெரிவிக்கும் தண்டோரா பயன்பாட்டை தடை செய்ய நடவடிக்கை மேற்கொண்டார். தூய்மைப் பணியாளர்கள் அமர தனிஇடம் ஒதுக்க உத்தரவு பிறப்பித்தார். சுதந்திர தினத்தில் பட்டியலின ஊராட்சித் தலைவர்கள் கொடியேற்றுவதில் பாகுபாடு காட்டப்படுவதை தடுத்தார்.

கள ஆய்வில் கவனம்: ஞாயிற்றுக்கிழமைகளில் பல்வேறு துறை அதிகாரிகளுடன் களஆய்வை மேற்கொண்டு, அறிவுறுத்தல்களை வழங்குவதை வாடிக்கையாகக் கொண்டிருந்தார். இதுபோன்ற ஓர் ஆய்வால், பருவமழைக்காலத்தில் சென்னையில் தண்ணீர் தேங்குவது குறைந்தது. இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை மாவட்ட ஆட்சியர்களுடன் கலந்துபேசி, தக்க அறிவுரைகளை வழங்கினார். பணியிடங்கள் தூய்மைக்காக ‘எழில்மிகு அலு வலகம்' என்ற கருத்துருவை அமல்படுத்தினார்.

தான் எழுதிய புத்தகங்களை நூலகங்களுக்கு வாங்கக் கூடாது, நிகழ்ச்சிகளில் பரிசாக அளிக்கக் கூடாது என கண்டிப்பாக உத்தரவிட்டார். இரண்டு ஆண்டுகளாக தனிப்பட்ட எந்த நிகழ்ச்சியிலும் பங்கேற்காமல், அரசு நிகழ்ச்சிகளில் மட்டுமே பங்கேற்றார். விருது, பாராட்டுக்களைத் தவிர்த்தார்.

ஞாயிற்றுக்கிழமைகளில் மாவட்ட ஆட்சியர்கள், துறைத்தலைவர்கள், அரசு செயலர்களுக்கு கடிதம் எழுதி, வாட்ஸ்-அப் மூலம் அனுப்பிவைத்தார்.

புதிதாக பொறுப்பேற்கும் மாவட்ட ஆட்சியர்கள், எவற்றில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்பது தொடர்பாக 51 குறிப்புகளை வகுத்து, சிறப்புக் கடிதமாக அனுப்பி வைத்தார். அண்மையில், மயானங்களை ‘பசுமை மயானபூமி’யாக மாற்றுமாறு ஆட்சியர்களுக்கு கடிதம் எழுதினார். சுற்றுலா தலங்களில் வாகன ஓட்டுநர்களுக்கு அறை ஒதுக்க அறி வுறுத்தினார்.

மாவட்ட ஆட்சியர்கள், காவல்கண்காணிப்பாளர்கள் மட்டுமே பங்கேற்ற மாநாட்டில், வன அதிகாரிகளுக்கும் தனி அரங்கம் ஏற்படுத்தி, கவனிக்கப்படாத துறைகள் மீதும் அக்கறை செலுத்தினார். அரசுக் கோப்புகளில் நிலவும் தாமதத்தை தவிர்க்க தீவிர நடவடிக்கை மேற்கொண்டார்.

கடந்த 10, 15 ஆண்டுகளாக தீர்க்கப்படாமலிருந்த மக்கள் பிரச்சினைகள், வாட்ஸ்-அப் மூலம் தீர்க்கப்பட்டு, ஏழை மக்களுக்கு நிவாரணங்கள் வழங்கப்பட்டன.

நிதியின்மையால் உயர்கல்வி பயில இயலாத மாணவர்களுக்குத் தேவையான உதவிகளை செய்து, தனது மனித நேயத்தை வெளிப்படுத்திய இறையன்பு, நிர்வாகப் பணி, எழுத்துப் பணியுடன், அரசு நிகழ்ச்சிகளில் ஊக்குவிக்கும் வகையிலான அவரது பேச்சு, ஓய்வுபெறும் காலத்திலும் அனைவர் மத்தியிலும் அவருக்கு சிறப்பைச் சேர்த்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x