

சென்னை: தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: திருவள்ளூர் மாவட்டம், ஆவடி வட்டம், மோரை பகுதியைச் சேர்ந்த ஸ்டீபன் ராஜ், சௌபாக்கியம் தம்பதியின் 9 வயது மகள் டானியா, அரிய வகை முகச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்டார்.
அறுவை சிகிச்சை மேற்கொள்ள சிறுமியின் பெற்றோரிடம் போதிய வசதி இல்லாத காரணத்தால், மகளின் முகச்சிதைவு நோய்க்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ள உதவும்படி முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் கோரிக்கை விடுத்தனர். இதையறிந்த முதல்வர், சிறுமி டேனியாவுக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ள மாவட்ட நிர்வாகத்துக்கு உத்தரவிட்டு, சவிதா மருத்துவக் கல்லூரியில் சிறுமிக்கு முகச்சீரமைப்பு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
இந்நிலையில், சிறுமி டானியாவுக்கு திருவள்ளூர் மாவட்டம் பாக்கம் கிராமத்தில் ரூ.1.48 லட்சம் மதிப்புடைய நிலத்துக்கான வீட்டுமனைப் பட்டா மற்றும் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலம் அனைவருக்கும் வீடு வசதி திட்டத்தின் கீழ் ரூ.2.10 லட்சம் மதிப்பில் வீடு கட்டிக் கொள்வதற்கான அனுமதி ஆணை ஆகியவற்றை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில், சட்டப்பேரவை உறுப்பினர் சா.மு.நாசர் மற்றும் டானியாவின் பெற்றோர் பங்கேற்றனர். இதேபோல, தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் மாநிலம் முழுவதும் 2022-23-ல் நடைபெற்ற திருக்குறள் முற்றோதல் போட்டியில் வென்ற 124 மாணவர்களுக்கு பரிசு, பாராட்டுச் சான்றிதழ் வழங்கும் அடையாளமாக, 9 மாணவ, மாணவியர்களுக்கு பரிசுத் தொகையாக தலா ரூ.15 ஆயிரத்துக்கான காசாலை மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில், செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், தமிழ் வளர்ச்சித் துறைச் செயலர் இரா.செல்வராஜ், இயக்குநர் ந.அருள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இவ்வாறு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.