Published : 01 Jul 2023 04:03 AM
Last Updated : 01 Jul 2023 04:03 AM

சமூகத்துக்கு சேவையாற்றும் எண்ணம் மாணவர்களுக்கு அவசியம்: நிர்மலா சீதாராமன் அறிவுரை

பல்லாவரம்: பல்லாவரம் ரேடியல் சாலையில் உள்ள வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் 13-வது பட்டமளிப்பு விழா நேற்று நடைபெற்றது.

இதில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், 75 மாணவர்களுக்கு தங்கப் பதக்கம், 169 மாணவர்களுக்கு பி.ஹெச்டி. பட்டங்களை வழங்கினார். மொத்தம் 4,305 மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன.

தொடர்ந்து, பல்வேறு துறைகளில் சாதனை படைத்த ஆர்.எம்.கே. கல்விக் குழுமத் தலைவர் முனிரத்தினம், ப்ரஸ் ஒர்க் நிறுவன உரிமையாளர் கிரிஷ் மாத்ரு பூதம், கோவை இந்துஸ்தான் மருத்துவமனை சிறுநீரகவியல் துறைப் பேராசிரியர் டாக்டர் ராமலிங்கம், தடகள வீராங்கனை அஞ்சுபாபி ஜார்ஜ் ஆகியோருக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது.

விழாவில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசியதாவது: ஒவ்வொரு நாடும் போட்டி போட்டுக் கொண்டு புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி வருகின்றன. அதிக தகுதியுடைய இளைஞர்கள் மிக்க நாடாக இந்தியா விளங்குகிறது. வேல்ஸ் பல்கலைக்கழகம் அனைத்து அங்கீகாரங்கள் மற்றும் உரிமங்களைப் பெற்றுத் திகழ்கிறது.

பல்லாவரம் வேல்ஸ் பல்கலை.யில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் பங்கேற்ற மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பல்வேறு துறைகளைச் சேர்ந்த கிரிஷ் மாத்ரு பூதம், ஆர்.எஸ்.முனிரத்தினம், அஞ்சு பாபி ஜார்ஜ், டாக்டர் ராமலிங்கம் ஆகியோருக்கு கவுரவ டாக்டர் பட்டங்களை வழங்கினார். உடன், பல்கலை. வேந்தர் ஐசரி கணேஷ், இணை வேந்தர்கள் ஆர்த்தி கணேஷ், ஜோதிமுருகன், துணைத் தலைவர் ப்ரீத்தா கணேஷ் உள்ளிட்டோர். படம்: எம்.முத்துகணேஷ்

சமூகத்துக்கு சேவையாற்ற வேண்டுமென்ற எண்ணம், மாணவர்களுக்கு அவசியம். கல்வியால் தேசம் அடைந்துள்ள வளர்ச்சியை மாணவர்கள் தெரிந்துகொள்ள வேண்டும். இந்தியாவில் அதிக அளவில் பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள், அறிவியல் ஆய்வகங்கள் தொடங்கப்பட்டு வருகின்றன.

2014-ம் ஆண்டுக்கு முன்பு வரைஇந்தியாவில் 720 பல்கலைக்கழகங்களே இருந்தன. தற்போது அந்த எண்ணிக்கை 1,113-ஆக அதிகரித்துள்ளது. அதேபோல, மருத்துவப் படிப்புக்கான மாணவர்கள் எண்ணிக்கை 2014-க்கு முன் 51,348-ஆக இருந்தது. தற்போது அது 99,763-ஆக உயந்துள்ளது. நடப்பாண்டு மட்டும் நாடு முழுவதும் மொத்தம் 10 லட்சம் அரசு வேலைகள் வழங்கப்பட்டுள்ளன.

சர்வதேச அளவில் ஆண்ட்ராய்டு போன் பயன்படுத்துவோர் எண்ணிக்கையில் இந்தியா முதலிடத்தையும், இன்டர் நெட் பயன்பாட்டில் இரண்டாவது இடத்தையும் பெற்றுள்ளது. 2025-ல் விண்வெளி ஆராய்ச்சியில் இந்தியா தன்னிகரற்றுத் திகழும்.2024-ம் ஆண்டுக்குள் அமெரிக்காவின் டெக்சாஸில் இந்தியர்கள் பயிற்சி மேற்கொண்டு, விண்வெளிக்குப் பயணம் செல்லும் நிலை ஏற்படும்.

அதற்கான ஒப்பந்தத்தில் பிரதமர் மோடி கையெழுத்திட்டுள்ளார். பெங்களூருவை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் இந்துஸ்தான் ஏரோ நாட்டிக்கல் நிறுவனத்தில், `மேக் இன் இந்தியா' திட்டத்தில் எஃப்-4141 ரக இன்ஜின் தயாரிக்கப்பட்டு வருகிறது இவ்வாறு நிர்மலா சீதாராமன் பேசினார்.

வேல்ஸ் பல்கலை. வேந்தர் ஐசரிகணேஷ் தலைமையில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில், இணைவேந்தர்கள் ஜோதி முருகன், ஆர்த்தி, துணைத் தலைவர் ப்ரீத்தா மற்றும் மாணவ,மாணவிகள், பெற்றோர் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x