

சென்னை: மழை தொடங்கும் முன் சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என போரூர் சுபஸ்ரீ நகர் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சென்னை, போரூர் 153-வது வார்டில் சுபஸ்ரீ நகர் உள்ளது. இங்கு 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இதில் சுபஸ்ரீ நகர் விரிவு பகுதியில் பாதாள சாக்கடை அமைப்பதற்காக பள்ளம் தோண்டப்பட்டது. பல மாதங்களாக நடைபெற்ற பணிகள் முடிவடைந்தபோதும் கடந்த 2 வாரங்களுக்கு மேலாக சாலை அமைக்கப்படவில்லை.
இதனால் அண்மையில் பெய்த கனமழை இப்பகுதிமக்கள் மிகுந்த இன்னலுக்கு ஆளாகினர். சாலை முழுவதும் மண் குவிந்து ஓரடி உயரத்துக்கு மணல் திட்டுகள் உருவாகின. குறிப்பாக இந்த சாலையின் இறுதியில் ஒரு தனியார் பள்ளி செயல்படுகிறது. அங்கு குழந்தைகளைக் கொண்டு விடவும், அழைத்துச் செல்வதற்கும் வரும் பெற்றோர் பெரும் சிரமத்துக்கு உள்ளாகினர்.
அவர்கள் சாலையின் முகப்பில் வாகனங்களை விட்டு குழந்தைகளுடன் நடந்து செல்ல வேண்டியுள்ளது. இவ்வாறு வந்து செல்லும் போது குழந்தைகளும், பெற்றோரும் பல முறை நிலை தடுமாறி கீழே விழுகின்றனர். இதனால் அடுத்து மழை எப்போது தொடங்கும் என்னும் அச்சத்தில் அப்பகுதி மக்கள் இருந்து வருகின்றனர்.
இது தொடர்பாக அப்பகுதியைச் சேர்ந்த சரவணன் கூறும்போது, "பாதாள சாக்கடை பணிகள் முடிந்தும் கடந்த 2 வாரங்களுக்கும் மேலாக சாலைகள் அமைக்கப்படவில்லை. மழை பெய்ததால் சாலையில் மணல் திட்டு உருவாகி பொதுமக்கள் வெகுவாக பாதிக்கப்பட்டனர். அப்போது கூட பணியை மேற்கொண்டவர்கள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
காலையும் மாலையும் பெரியவர்கள், குழந்தைகள் என பலர் கீழே விழுந்த வண்ணம் இருந்தனர். இங்கு வந்து செல்லும் வாகனங்கள் மூலம் நாளடைவில் மணல் திட்டுகள் குறைந்துள்ளன. அந்த வாகனங்களும் பல முறை சேற்றில் சிக்கின. ஒவ்வொரு முறையும் அந்த வாகனங்களை மீட்பதே பெரும் வேலையாக இருந்தது.
இங்குள்ள கட்டுமான தளத்தில் உள்ள சிமெண்ட் மூட்டைகளை வைத்து பள்ளங்களை சரி செய்து சமாளித்து வருகிறோம். பெரும்பாலானோர் பள்ளியின் பின் பகுதிக்குச் சென்றே குழந்தைகளை அனுப்புகின்றனர். சில நாட்களாக லேசான சாரல் மழை பெய்கிறது. அடுத்து கனமழை தொடங்கும் முன் சாலையை மீண்டும் அமைக்க வேண்டும்" என்றனர்.
இது தொடர்பாக கழிவுநீரகற்று வாரிய உயரதிகாரிகளிடம் கேட்டபோது, "சாலை அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. அங்கு ஜல்லி போன்றவற்றை இறக்கி வைத்துள்ளோம். விரைவில் சாலை அமைக்கப்படும்" என்றனர் சுருக்கமாக.