

சென்னை: ‘இந்து தமிழ் திசை' நாளிதழ் எதிரொலியாக சென்னை, சின்னமலை பகுதியில் பழுதடைந்த சிக்னல் சரிசெய்யப்பட்டு மீண்டும் பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது.
சென்னை, சின்னமலை பகுதியில் சைதாப்பேட்டை நீதிமன்றம், மாநகர போக்குவரத்துக் கழக பணிமனை, பள்ளி ஆகியன இருப்பதால் ஆளுநர் மாளிகையை நோக்கியிருக்கும் தாலுகா அலுவலக சாலையில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக காணப்படும். இங்கு கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக சிக்னல் பயன்பாட்டில் இல்லை.
இதனால் சாலையைக் கடப்பது என்பது பாதசாரிகளுக்கு மிகப்பெரிய சவாலாக இருந்து வந்தது. குறிப்பாக சிக்னலை மீண்டும் வைத்தபோதும் அவை கீழே விழுந்ததாக பொதுமக்கள் தெரிவித்திருந்தனர். அந்த பகுதியில் நடைமேம்பாலம் இருந்தபோதும் பெரும்பாலானோர் சாலையில்தான் மறுபுறம் செல்கின்றனர்.
இந்த சிக்னல் பயன்பாட்டில் இல்லாதது முதியவர்களுக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்தியது. அவர்களுக்காகவாவது சிக்னலை விரைந்து அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்களும், பணி நிமித்தமாக அங்கு வந்து செல்வோரும் கோரிக்கை விடுத்திருந்தனர். இது தொடர்பான செய்தி, நேற்று ‘இந்து தமிழ் திசை' நாளிதழின் சிறப்பு பக்கத்தில் வெளியானது.
இதையடுத்து போக்குவரத்து காவல்துறை எடுத்த முயற்சியின் காரணமாக உடனடியாக சிக்னல் அமைக்கப்பட்டது. இது தொடர்பாக செய்தி வெளியிடுமாறு கோரிக்கை விடுத்திருந்த வாசகர்கள் கூறும்போது, "உடனடியாக சிக்னல் அமைப்பதற்கு உறுதுணையாக இருந்ததற்கு நன்றி. இனி அச்சமின்றி சாலையைக் கடக்க முடியும்" என்றனர்.