

திண்டுக்கல்: இல்லத்தரசிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கும் திட்டத்தின் மூலம் கிராமங்களில் வசிக்கும் பெண்கள் அதிகம் பயன்பெறுவர் என்று அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்தார்.
திணடுக்கல் மாவட்டம் கொத்தப்புள்ளி ஊராட்சி தாதன்கோட்டை, கதிரனம்பட்டி ஆகிய இடங்களில் அங்கன்வாடி மையங்கள் திறப்பு விழா நடைபெற்றது. ரெட்டியார் சத்திரம் ஒன்றிய தலைவர் ப.க.சிவகுருசாமி தலைமை வகித்தார். மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை மாவட்ட திட்ட இயக்குநர் திலகவதி, கொத்தப்புள்ளி ஊராட்சித் தலைவர் சுந்தரி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலர் பூங்கொடி வரவேற்றார். அங்கன்வாடி மையங்களை குத்துவிளக்கேற்றி அமைச்சர் ஐ.பெரியசாமி திறந்து வைத்து பேசியதாவது: காவிரி கூட்டுக் குடிநீர் திட்டம் தற்போது ரெட்டியார் சத்திரம் ஒன்றியம் முழுவதும் உள்ள கிராம ஊராட்சிகள் பயன்பெறும் வகையில் ரூ.250 கோடி மதிப்பில் விரிவுபடுத்தப்பட்டு வருகிறது.
இல்லத்தரசிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கும் திட்டத்தை முதல்வர் விரைவில் தொடங்கி வைக்க உள்ளார். இதன் மூலம் கிராமங்களில் வசிக்கும் பெண்கள் அதிகம் பயன்பெறுவர். இவ்வாறு அவர் பேசினார்.