சாத்தான்குளம் கொலை வழக்கை 3 மாதத்தில் முடிக்க வேண்டும்: உயர் நீதிமன்றம் உத்தரவு

சாத்தான்குளம் கொலை வழக்கை 3 மாதத்தில் முடிக்க வேண்டும்: உயர் நீதிமன்றம் உத்தரவு

Published on

மதுரை: சாத்தான்குளம் இரட்டை கொலை வழக்கை 3 மாதத்தில் முடிக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சாத்தான்குளத்தைச் சேர்ந்த வியாபாரி ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் 2020-ல் சாத்தான்குளம் போலீஸாரால் விசாரணைக்காக காவல் நிலையம் அழைத்துச் செல்லப்பட்டு உயிரிழந்தனர். இது தொடர்பாக சிபிஐ கொலை வழக்கு பதிவு செய்து காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், சார்பு ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், ரகு கணேஷ் மற்றும் ஒரு சிறப்பு சார்பு ஆய்வாளர், 5 காவலர்களை கைது செய்தது.

இந்த வழக்கு மதுரை முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது. விசாரணையை விரைவில் முடிக்கக்கோரி ஜெயராஜ் மனைவி செல்வராணி உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தார். அவரது மனுவை ஏற்று விசாரணையை முடிக்க கீழமை நீதிமன்றத்துக்கு காலக்கெடு விதித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அந்த காலக்கெடு இரு முறை நீட்டிக்கப்பட்டது.

இந்நிலையில் மதுரை முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றம் சார்பில், சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கை முடிக்க மேலும் 5 மாதம் அவகாசம் கோரி உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதி கே.முரளிசங்கர் முன்பு விசாரணைக்கு வந்தது. மாவட்ட நீதிமன்றம் சார்பில், சாத்தான்குளம் வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். நீதிபதி பணியிடம் காலியாக இருப்பதால் விசாரணை தாமதமாகிறது எனக் கூறப்பட்டது.

சிபிஐ தரப்பில், இரு மருத்துவர்கள், 1 நீதித்துறை நடுவர், சிபிசிஐடி, சிபிஐ விசாரணை அதிகாரிகள், 3 தனி நபர்கள் என 8 பேரை விசாரிக்க வேண்டியதுள்ளது. எனவே 2 முதல் 3 மாத கால அவகாசம் வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது.

இதை பதிவு செய்து கொண்ட நீதிபதி, சாத்தான்குளம் கொலை வழக்கை விசாரிக்கும் நீதிமன்றத்துக்கு நீதிபதி நியமிக்கப்பட்ட நாளிலிருந்து 3 மாதத்தில் விசாரணையை முடிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in