Published : 30 Jun 2023 07:40 PM
Last Updated : 30 Jun 2023 07:40 PM

வேலூரில் மாட்டுத் தொழுவமாக மாறிய பணிபுரியும் பெண்கள் விடுதி!

புதர்மண்டி பாழடைந்து வரும் பணிபுரியும் பெண்கள் விடுதி.

வேலூர்: வேலூர் காகிதப்பட்டரை பகுதியில் இயங்கி வந்த பணிபுரியும் பெண்கள் விடுதி மூடப்பட்டதால் அந்த கட்டிடம் மாட்டுத் தொழுவமாக மாறியுள்ளதை அதிகாரிகள் மீட்டு பராமரிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

வேலூரின் பிரதான பகுதியான காகிதப்பட்டரையில் சுமார் 5 ஆயிரம் சதுரடி பரப்பளவில் ‘பணிபுரியும் பெண்கள் விடுதி’ கட்டிடம் அமைந்துள்ளது. கடந்த 2007-ம் ஆண்டு ஜூலை 16-ம் தேதி திறப்பு விழா கண்ட கட்டிடத்தை மாவட்ட ஆட்சியராகவும் கில்ட் ஆப் சர்வீஸ் (வேலூர் சேவா சமாஜம்) தலைவருமாக இருந்த தர்மேந்திர பிரதாப் யாதவ் தலைமையில் அப்போதைய வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் காதர் மொய்தீன் திறந்து வைத்துள்ளார்.

இந்த நிகழ்ச்சியில் வேலூர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் ஞானசேகரன், மாநகராட்சி மேயர் கார்த்திகேயன் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். மாவட்ட ஆட்சியர் தர்மேந்திர பிரதாப் யாதவ் முயற்சியால் கட்டப்பட்ட இந்த விடுதி அரசு மற்றும் தனியார் அலுவலகங்களில் பணிபுரியும் பெண்களுக்கு வரப்பிரசாதமாக இருந்தது. வேலூர் சேவா சமாஜத்துக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்ட கட்டிடம் அடுத்த சில ஆண்டுகள் சிறப்பாகவே செயல்பட்டது.

வேலூர் மாவட்ட சமூக நலத்துறை கட்டுப்பாட்டில் இந்த பணிபுரியும் பெண்கள் விடுதி இயங்கி வந்தது. வழக்கம்போல் பெண்கள் விடுதியின் செயல்பாடுகள் குறைய ஆரம்பித்ததும் நிரந்தரமாக மூடப்பட்டது. கட்டிடம் வேறு பயன்பாட்டுக்கு இல்லாத நிலையில் தற்போது சமூக விரோதிகளின் கூடாரமாக மாறியுள்ளது.

கட்டிடத்தை சுற்றியுள்ள காலி இடங்களில் 20 அடிக்கு மேல் வளர்ந்துள்ள மரங்கள் மற்றும் புதர்கள் வளர்ந்து கட்டிடம் இருக்கும் இடம் தெரியாத அளவுக்கு மறைந்துள்ளது. கட்டிடத்தின் உள்ளே சென்று பார்த்தால் எந்தெந்த பொருட்களை எல்லாம் திருடிச் செல்ல முடியுமோ அதையெல்லாம் மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர். முதல் தளத்துக்கான படிக்கட்டின் பக்கவாட்டு இரும்பு கைப்பிடிகள் மொத்தமாக திருடப்பட்டுள்ளன.

அங்கிருந்த இரும்பு பீரோவை உடைத்து அதிலிருந்த பொருட்கள் திருடப்பட்ட நிலையில் அந்த பீரோவை திருடிச்செல்ல முடியாமல் அங்கேயே விட்டுச் சென்றுள்ளனர். இதில், உச்சபட்ச கொடுமையாக அந்த கட்டிடம் மாட்டுத் தொழுவமாக செயல்பட்டு வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காகிதபட்டரை பகுதியைச் சேர்ந்த சிலர் அந்த கட்டிடத்தில் 5-க்கும் மேற்பட்ட மாடுகளை கட்டி வைத்து பராமரித்து வருகின்றனர். அரசு செலவில் வாடகை இல்லாமல் மாட்டுத் தொழுவமாக செயல்பட்டு வருவதை எந்த அதிகாரியும் கண்டுகொண்டதாக தெரியவில்லை. இந்த கட்டிடத்தை பராமரித்து வந்த சமூக நலத்துறை அதிகாரிகளே அது தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள கட்டிடம் என்று மறந்து போயிருப்பார்கள் என்றே கூறலாம்.

இது தொடர்பாக காகிதபட்டரை பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கூறும்போது, ‘‘அரசு பணத்தில் கட்டிடம் கட்டினார்கள். அதை மூடாமல் வேறு எந்த துறைக்காவது வழங்கி இருந்தால் பயன்பட்டிருக்கும். ஒரு மாவட்ட ஆட்சியர் செய்யும் திட்டத்தை அடுத்து வரும் மாவட்ட ஆட்சியர்கள் யாரும் தொடர்ந்து செய்வதில்லை. இந்த நிலை மாற வேண்டும்.

மாடுகளை கட்டி வைக்கவா அந்த கட்டிடம் கட்டப்பட்டது. இரவு நேரத்தில் கஞ்சா புகைக்கவும் மதுபானம் குடிக்கும் இடமாகவும் சிலர் பயன்படுத்து கின்றனர்’’ என்று தெரிவித்தனர். இது குறித்து அதிகாரிகள் தரப்பில் விசாரித்தபோது, ‘‘அந்த கட்டிடத்தை சீரமைக்கலாம் என பல முறை முயற்சி செய்யப்பட்டது. அதற்கான திட்ட அறிக்கையும் கோரப்பட்டது. ஆனால், எல்லோருமே மறந்துவிட்டார்கள். மாவட்ட ஆட்சியர் மனது வைத்தால் மீண்டும் அந்த கட்டிடத்தை சீரமைத்து பயன்பாட்டுக்கு கொண்டுவர முடியும்’’ என தெரிவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x