Published : 30 Jun 2023 06:49 PM
Last Updated : 30 Jun 2023 06:49 PM

மதுரை - நத்தம் சாலையில் கழிப்பறையில்லா நடைப்பயிற்சி பூங்காக்கள்

படம்: நா.தங்கரத்தினம்

மதுரை: மதுரை - நத்தம் சாலையில் பறக்கும் பால கட்டுமானப் பணியின்போது அப்பகுதியில் உள்ள நாராயணபுரம் கண்மாய், ஊமச்சிகுளம் கண்மாய் ஆகியவற்றை தேசிய நெடுஞ்சாலை துறை சீரமைத்தது.

கண்மாய்களை சுற்றிலும்கரை அமைத்து சுற்றிலும் பொதுமக்கள் நடை பயிற்சி செல் வதற்கான நடைப்பயிற்சி பாதையையும், பூங்காக்களையும் அமைத்துள்ளனர். இந்த பூங்காக்களில் குழந்தைகளுக்கான விளையாட்டு சாதனங்களும் உள்ளதால் காலை, மாலை வேளைகளில் இப்பகுதியில் வசிக்கும் ஏராளமானோர் குடும்பத்துடன் இங்கு வந்து பொழுதுபோக்குகின்றனர். மின்னொளி வசதியும் உள்ளதால் அதிகாலை மற்றும் இரவு நேரங்களிலும் கூட்டம் குறைவதில்லை.

பறக்கும் பாலத்தில் இருந்து இந்த கண்மாய்களையும், பூங்காக்களையும் பார்க்கும்போது இது நம்ம ஊர்தானா என ஆச்சரியப்படும் அளவுக்கு அழகாக உள்ளது. இந்த பூங்காக்கள் நன்றாக பராமரிக்கப்படும் நிலையில் ஒரே குறையாக இங்கு கழிப்பறை வசதி எதுவும் இதுவரை செய்யப்படாமல் உள்ளது. இதனால் இங்கு நீண்டநேரம் செலவிட முடியாமல் பொதுமக்கள் சிரமத்துக்கு உள்ளாகின்றனர்.

இது குறித்து “இந்து தமிழ் திசை”யின் உங்கள் குரல் மூலம் தொடர்புகொண்ட திருப்பாலையைச் சேர்ந்த ராஜகோபால் கூறியதாவது: நாராயணபுரம், ஊமச்சிகுளம் கண்மாய் கரைகளில் அமைக்கப்பட்டுள்ள நடைபயிற்சி பூங்காக்கள் தரமான முறையில் அமைக்கப்பட்டுள்ளன. இருந்தபோதிலும் இதுவரை இங்கு கழிப்பறை வசதி ஏற்படுத்தப்படாமல் உள்ளது.

நடைப் பயிற்சிக்கு வருவோரில் பெரும்பாலானவர்கள் வயதானவர்களும், நீரழிவு நோயாளிகளுமாக உள்ளனர். கழிப்பறைகள் இல்லாததால், அவர்கள் நடைப்பயிற்சியை நீண்டநேரம் செய்ய முடியவில்லை. பூங்காவுக்கு வரும் பெண்கள், குழந்தைகளும் அவதிப்படுகிறார்கள். எனவே இரு கண்மாய்களிலும் உள்ள நடைப்பயிற்சி பூங்காக்களிலும் கழிப்பறைகள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று தெரிவித்துள்ளார்.

இது குறித்து தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, விரைவில் நாராயணபுரம், ஊமச்சிகுளம் பூங்காக்களில் கழிப்பறை வசதி செய்து கொடுக்கப்படும், என்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x