5 ஆண்டுகளில் ரூ.2.5 கோடி செலவிட்டும் பயனில்லை - புதுச்சேரி அரசின் நீச்சல் குளம் எப்போது வரும்?
புதுச்சேரி: தமிழகத்தில் பல மாவட்டங்களில் நீச்சல் பயிற்சி பெற அரசு சார்பில் நீச்சல் குளங்கள் கட்டி பராமரிக்கப்பட்டு வருகின்றன. ஆனால், அழகான கடற்கரை வளம், நல்ல நீச்சல் திறன் கொண்ட வீரர், வீராங்கனைகளைக் கொண்ட புதுச்சேரியில் அரசு சார்பில் ஒரு நீச்சல் குளம் கூட இல்லை.
தனியார் நீச்சல் குளத்தில் தான் நீச்சல் வீரர், வீராங்கனைகள் பயிற்சி பெற வேண்டியது உள்ளது.இதை கருத்தில் கொண்டு புதுவை அரசு சார்பில் கடந்த 2018-ம் ஆண்டு நீச்சல் குளம் கட்ட சாரதாம்பாள் நகரில் இடம் கையகப்படுத்தப்பட்டது. மத்திய அரசின் ‘கேலோ இந்தியா’ திட்டத்தின் கீழ் ரூ. 5 கோடியில் நீச்சல் குளம் கட்ட மத்திய அரசின் ஒப்புதல் பெறப்பட்டது. இதற்கான அரசாணை கடந்த 6.3.2018-ல் வெளியிடப்பட்டு, 7.7.2018-ல்பணிகள் தொடங்கப்பட்டன.
ஒலிம்பிக் போட்டி தரத்தில் 50 மீட்டர் நீளமும், 25 மீட்டர் அகலமும் 1.75 மீட்டர் ஆழமும் கொண்ட நீச்சல்குளம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. நீச்சல் குளத்தின் அருகில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு தனித் தனியே 8 உடை மாற்றும் அறைகள், பொருட்கள் பாதுகாப்பு அறை என அனைத்து வசதிகளுடன் கட்ட முடிவு செய்யப்பட்டது. மேலும், இந்த வளாகத்தில் பல்வேறு அறைகளும் அமைக்க திட்டமிடப்பட்டது.
முதற்கட்டமாக ஒப்பந்ததாரருக்கு ரூ. 2 கோடியே 50 லட்சம் வழங்கப்பட்டது. ‘15 மாதங்களுக்குள் இப்பணிநிறைவடையும்’ என்று தெரிவித்தனர். முதற்கட்ட பணியாக நீச்சல் குளத்துக்கு அடித்தளம் அமைத்து, சுற்றிலும்,சுவர்கள் முழுவதும் கான்கிரீட்டில் அமைக்கப்பட்டுள்ளன. நீச்சல் குளத்துக்கு அருகில் அறை கட்டப்பட்டு அதில் தண்ணீரை வெளியேற்றும் இயந்திரமும் வைக்கப்பட்டது. கடந்த 2021-ம் ஆண்டு ஏற்பட்ட ஆட்சி மாற்றத்துக்குப் பின் மீண்டும் இந்த நீச்சல் குளத்துக்கு நிதி பெற நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
இது தொடர்பாக விளையாட்டு வீரர்கள் தரப்பில் விசாரித்தபோது, "நீச்சல் குளம் கட்ட 70 சதவீத பணிகள் முடிவடைந்த நிலையில் நிதி பற்றாக் குறை காரணமாக பணிகள் அப்படியே நிறுத்தப்பட்டது. அந்தப் பணியை எடுத்த நிறுவனத்தினர் தங்களுக்கு நிலுவை பணத்தை வழங்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். இருப்பினும் நிதி வழங்க கால தாமதம் ஏற்பட்டது. இரண்டரை ஆண்டுகளாக பணிகள் எதுவும் நடைபெறவில்லை” என்றனர்.
நீச்சல் குளம் பகுதியில் குடியிருப்போர் கூறுகையில், "நீச்சல் குளம் வருவதாக ஆவலாக இருந்தோம். தற்போது, நீச்சல் குளம் பகுதி புதர் மண்டி கிடக்கிறது. நகரின் முக்கியப் பகுதியில் இவ்விடம் அமைந்துள்ளதால் இங்கிருந்து வெளியேறும் பூச்சிகள், பாம்புகள் எங்கள் குடியிருப்பில் புகுந்து பாதிப்பு உருவாகிறது.
பல நேரங்களில் சிலர் இங்கு வந்து மது குடிக்கின்றனர். போதை பொருட்கள் பயன்படுத்துவோரும் வருகின்றனர். வீரர்கள், வீராங்கனைகள் பயிற்சி பெற வருவார்கள் என எதிர்பார்த்தால், தற்போது சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி வருகிறது" என்று வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.
இது பற்றி சமூக ஆர்வலர்கள் கூறுகையில், "நீச்சல் குளம் அமைக்கும் பணி இடையில் கைவிடப்பட்டதால் கட்டுமானத்துக்குப் பயன்படும் இரும்பு கம்பிகள், சில உபகரணங்கள் அங்கேயே உள்ளன. இதனை சமூக விரோதிகள் சிலர் திருடிச் செல்கின்றனர். இதுவரை சுமார் 3 டன் அளவுக்கு இரும்பு கம்பிகள் திருடு போயுள்ளதாக கூறப்படுகிறது.
நீச்சல் குளத்தில் ஒரு முறை நிரப்ப வேண்டும் என்றால் 20 லட்சம் லிட்டர் தண்ணீர் தேவைப்படும். இதற்காக தனியாக அந்த வளாகத்தின் உள்ளேயே ஆழ்குழாய் கிணறு அமைக்க வேண்டும். இல்லை என்றால் வேறு எங்காவது ஆழ்குழாய் கிணறு அமைத்து தண்ணீரை கொண்டு வர வேண்டும். அதற்கு இன்னும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
அரசு இனியாவது போதிய நிதியை ஒதுக்கி பணிகளை முடித்தால் நன்றாக இருக்கும்" என்றனர். பொதுப்பணித்துறை வட்டாரங்களில் இதுபற்றி கேட்டதற்கு, "நிதிப் பற்றாக்குறைதான் முக்கிய காரணம். அதை சரி செய்து, கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது" என்கின்றனர்.
