

சென்னை: குடும்ப அரசியலை நாம் நடத்திக் கொண்டிருப்பதாக பிரதமர் மோடி கூறியுள்ளார். உண்மைதான். இங்கு திமுக குடும்ப அரசியல்தான் நடைபெறுகிறது என்று திருமண விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
திமுக முன்னாள் எம்எல்ஏ இல்ல திருமண விழா சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று நடைபெற்றது. இதில் பங்கேற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:
பிரதமர் பேச்சு: இரண்டு நாட்களுக்கு முன் பிரதமர் மோடி பேசும்போது, குடும்ப அரசியலை நாம் நடத்திக்கொண்டிருப்பதாகக் கூறியுள்ளார். உண்மைதான். இது குடும்ப அரசியல்தான். இதைச் சொன்னதற்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். ஆனால், அத்தோடு நிறுத்தாமல், குடும்பம் குடும்பமாக அரசியலை நடத்திக்கொண்டு, அவர்கள் பிழைப்பு நடத்திக் கொண்டிருக்கின்றனர், வளர்ச்சியடைந்து கொண்டிருக்கின்றனர் என்ற தொனியில் பேசியிருக்கிறார்.
அறிஞர் அண்ணா, இந்த இயக்கத்தை தொடங்கிய நேரத்தில் தொண்டர்களை ‘தம்பி’ என்றுதான் உரிமையோடு அழைத்தார். அதைத்தொடர்ந்து நம் தலைவர் கருணாநிதி, ‘உடன்பிறப்பே’ என்றுதான் ஒட்டுமொத்தமாக அழைத்து அந்த உணர்வை வெளிப்படுத்திக் காட்டியிருக்கிறார். எனவே இது உள்ளபடியே குடும்ப அரசியல் தான்.
திராவிட இயக்க வழக்கம்: திமுகவின் மாநாட்டுக்கு மட்டுமல்ல; போராட்டத்துக்கும் கூட குடும்பம் குடும்பமாகப் பங்கேற்று, சிறை சென்று பலகொடுமைகளை எல்லாம் அனுபவித்திருக்கிறோம். இது திராவிட இயக்கத்தில் இருக்கும் வழக்கம். ஆனால் பிரதமர், ‘திமுகவுக்கு வாக்களித்தால் கருணாநிதியின் குடும்பம்தான் வளர்ச்சி அடையும்’ என்று பேசியிருக்கிறார்.
ஆம், கருணாநிதியின் குடும்பம் என்பதே இந்த தமிழகம்தான். தமிழர்கள்தான். 50 ஆண்டு காலமாக திராவிட இயக்கம்தான் தமிழகத்தில் ஆட்சிப் பொறுப்பில் இருந்து கொண்டிருக்கிறது. இந்த 50 ஆண்டு காலத்தில் தமிழகம் வளர்ச்சி அடைந்திருக்கும் நிலை களை எல்லாம் பார்த்துவிட்டு, பிரதமர் பேச வேண்டும்.
இந்த நவீன தமிழ்நாட்டை உருவாக்கியவர் கருணாநிதிதான். அந்த வழியில்தான் 6-வது முறையாக ‘திராவிட மாடல் ஆட்சி‘யாக நம் பணியை நிறைவேற்றுகிறோம்.
பொது சிவில் சட்டம்: பொது சிவில் சட்டம் கொண்டுவரப்படும். ஒரு நாட்டில் இரண்டு விதமான சட்டங்கள் இருக்கக் கூடாது என்கிறார் பிரதமர் மோடி. இதன்மூலம் மதப் பிரச்சினையை உருவாக்கி, நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்தி வெற்றி பெற்றுவிடலாம் என அவர் கருதுகிறார்.
தேர்தல் நேரத்தில் என்னஉறுதிமொழிகளை எடுத்துச் சொல்லி ஆட்சிக்கு வந்திருக்கிறோமோ, அந்த உறுதிமொழிகளை எல்லாம் திமுக அரசு தொடர்ந்து நிறைவேற்றி வருகிறது. இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.